விருத்தாசலம் அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
விருத்தாசலம் அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அடுத்த கோ.பூவனூர் ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அதே பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடும் வறட்சி காரணமாக அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்தது.
இதனால் ஆழ்துளை கிணறு வறண்டதால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற முடியாத நிலை உருவானது. இதன் காரணமாக பொது மக்களுக்கு சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்யமுடியாததால் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதனால் அவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் குடிநீருக்காக அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கும், கிராமங்களுக்கும் சென்று தண்ணீர் பிடித்து வந்து பயன்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் நேற்று திடீரென காலி குடங்களுடன் பூவனூர் பஸ் நிறுத்தம் அருகே ஒன்று திரண்டனர். தொடர்ந்து அவர்கள் தங்களுக்கு சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்யக்கோரி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதையடுத்து அவர்கள் தாங்களாகவே ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்தனர். அப்போது குடிநீர் பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story