அகில இந்திய கூடைப்பந்து போட்டி: சென்னை இந்தியன் வங்கி அணி ‘சாம்பியன்’


அகில இந்திய கூடைப்பந்து போட்டி: சென்னை இந்தியன் வங்கி அணி ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 26 May 2019 10:45 PM GMT (Updated: 26 May 2019 8:31 PM GMT)

கரூரில் நடந்த அகில இந்திய கூடைப்பந்து போட்டியில், பெங்களூரு பேங்க் ஆப் பரோடா அணியை வீழ்த்தி, சென்னை இந்தியன் வங்கி அணி சாம்பியன் ஆனது.

கரூர்,

கரூர் மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில், கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நடந்த எல்.ஆர்.ஜி. நாயுடு நினைவு கோப்பைக்கான அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டி நடைபெற்று வந்தது. இதில் நேற்றிரவு நடந்த இறுதிப்போட்டியில், பெங்களூரு பேங்க் ஆப் பரோடா அணியும், சென்னை இந்தியன் வங்கி அணியும் மோதின.

இதில் ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் சரிக்கு சமமாக விளையாடியதால், ஒரு கட்டத்தில் இரு அணியும் 72-72 என்ற புள்ளி கணக்கில் இருந்தன. ஆனால் கடைசி கட்டத்தில் சிறப்பாக விளையாடிய சென்னை இந்தியன் வங்கி அணி, 88-79 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு பேங்க் ஆப் பரோடா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.

முன்னதாக 3-வது இடத்தை பிடிப்பதற்காக நடந்த ஆட்டத்தில் சென்னை ஐ.சி.எப். அணியை 76-48 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி, புதுடெல்லி இந்திய ராணுவ அணி 3-வது இடத்தை பிடித்தது.

பரிசளிப்பு விழா

இதைத்தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்துகொண்டு, முதலிடம் பெற்ற சென்னை இந்தியன் வங்கி அணிக்கு எல்.ஆர்.ஜி. நாயுடு நினைவு சுழற்கோப்பையுடன், ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகையை வழங்கினார். கரூர் கூடைப்பந்து கழக தலைவர் வி.என்.சி.பாஸ்கர், கரூர் வைஸ்யா வங்கி இயக்குனர் சூரியநாராயணா, கூடைப்பந்து கழக செயலாளர் முகமது கமாலுதீன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

2-வது இடம் பிடித்த பெங்களூரு பேங்க் ஆப் பரோடா அணிக்கு எல்.ஜி.வரதராஜ் கோப்பையுடன் ரூ.30 ஆயிரம் பரிசுத்தொகையும், 3-ம் இடம்பெற்ற புதுடெல்லி இந்திய ராணுவ அணிக்கு சூரியநாராயண செட்டியார் நினைவு சுழற்கோப்பையுடன் ரூ.25 ஆயிரமும், 4-வது இடம்பிடித்த ஐ.சி.எப். அணிக்கு எம்.ஆர்.பழனிசாமி நினைவு சுழற்கோப்பையுடன் ரூ.20 ஆயிரமும் வழங்கப்பட்டது. 

Next Story