திருச்சுழி போலீஸ் நிலையம் அருகே நடந்த அ.தி.மு.க. பிரமுகர் கொலையில் நண்பர்களுக்கு தொடர்பா? விசாரணை தீவிரம்


திருச்சுழி போலீஸ் நிலையம் அருகே நடந்த அ.தி.மு.க. பிரமுகர் கொலையில் நண்பர்களுக்கு தொடர்பா? விசாரணை தீவிரம்
x
தினத்தந்தி 27 May 2019 5:30 AM IST (Updated: 27 May 2019 4:06 AM IST)
t-max-icont-min-icon

திருச்சுழி போலீஸ் நிலையம் அருகே நடந்த அ.தி.மு.க. பிரமுகர் கொலையில் நண்பர்களுக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இதைத்தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

திருச்சுழி,

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள ஆண்டிபட்டியை சேர்ந்தவர் சாமுவேல் மரிய செல்வகுமார்(வயது53). அ.தி.மு.க. பிரமுகரான இவர் ஆலடிபட்டியில் கல்குவாரி நடத்தி வந்தார். திருச்சுழியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்றுமுன்தினம் இரவு ஓட்டலுக்கு சென்று சாப்பாடு வாங்கி விட்டு திருச்சுழி போலீஸ் நிலையம் அருகே இவர் வந்து கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார்சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் அரிவாள், கத்தியால் வெட்டி சாமுவேல்மரிய செல்வகுமாரை கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர். போலீஸ் நிலையம் அருகே நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பையும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கொலைகுறித்து துப்புதுலக்க திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு சசிதரன் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன என்று தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது சாமுவேல் மரிய செல்வகுமாருடன் முன்பு நண்பர்களாக இருந்த சிலர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. நண்பர்களாக இருந்தவர்கள் தற்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டு நட்பை முறித்துக்கொண்ட நிலையில் சமீபத்தில் அவருடன் மோதல் ஏற்பட்டுள்ளது. அதில் ஏற்பட்ட பிரச்சினையில் அவர் தீர்த்துக்கட்டப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

இதுதொடர்பாக 2 பேர் போலீசாரிடம் சிக்கியுள்ளனர். இதில் ஒருவர் திருச்சுழியில் சமீபத்தில் நடந்த கொலையில் சம்பந்தப்பட்டு ஜாமீனில் வந்தவர் என்று கூறப்படுகிறது. மேலும் சிலரையும் போலீசார் தங்களது விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இறந்த சாமுவேல் மரிய செல்வகுமாருக்கு டெய்சிராணி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். சமீபகாலமாக திருச்சுழியில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நகரின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டால் குற்றங்கள் பெருமளவு குறையும் என்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

Next Story