பழனி அருகே தனியார் பால் சுத்திகரிப்பு ஆலையில் என்ஜினீயர் மர்ம சாவு; உறவினர்கள் சாலை மறியல்


பழனி அருகே தனியார் பால் சுத்திகரிப்பு ஆலையில் என்ஜினீயர் மர்ம சாவு; உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 27 May 2019 5:15 AM IST (Updated: 27 May 2019 4:45 AM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே தனியார் பால் சுத்திகரிப்பு ஆலையில் என்ஜினீயர் மர்மமான முறையில் இறந்ததாக கூறி, அவரின் உறவினர்கள் பழனி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்

பழனி,

பழனி அருகேயுள்ள முத்துநாயக்கன்பட்டியை சேர்ந்த சின்னச்சாமி மகன் கருப்புச்சாமி (வயது 26). என்ஜினீயரிங் முடித்துள்ள இவர் கீரனூர் அருகே அத்திமரத்துவலசு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பால் சுத்திகரிப்பு ஆலையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று இவர் ஆலையில் உள்ள ‘லிப்டில்’ பொருட்களை கொண்டு சென்றபோது, எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்ததாக தெரிகிறது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து ஆலை நிர்வாகம் சார்பில் அவர் சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதற்கிடையே மதியம் 12 மணி அளவில் கருப்புச்சாமி இறந்ததாக அவருடைய உறவினர்களுக்கு ஆலை நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவரின் உறவினர்கள் பழனி அரசு மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர்.

இந்நிலையில் கருப்புச்சாமியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவருடைய உறவினர்கள் போராட்டம் நடத்த முற்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இந்நிலையில் மாலை 6 மணி அளவில் கருப்புச்சாமியின் உறவினர்கள் பழனி அரசு மருத்துவமனை முன்பு திண்டுக்கல் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது கருப்புச்சாமியின் உறவினர்கள் கூறுகையில், காலை 9 மணிக்கு கருப்புச்சாமி இறந்ததாக தெரிகிறது. ஆனால் எங்களுக்கு மதியம் 12 மணி அளவில் ஆலை நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்தனர். மேலும் அவருடன் வேலை பார்க்கும் யாரையும் வெளியே விடாமல் ஆலைக்குள் வைத்துள்ளனர். இதனால் அவர் சாவில் சந்தேகம் உள்ளது. எனவே போலீசார் சந்தேக மரணம் என்று பதிவுசெய்து, கருப்புச்சாமி எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றனர்.

இதற்கிடையே மறியலால் பழனி–திண்டுக்கல் சாலையில் வாகன போக்குவரத்து தடைபட்டு, இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதைத்தொடர்ந்து அங்கு வந்த ஒட்டன்சத்திரம் போலீஸ் துணை சூப்பிரண்டு சீமைச்சாமி, பழனி டவுன் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் கீரனூர், தாலுகா போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாரிடம் உறவினர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. இதைத்தொடர்ந்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். அதன்பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story