மோடி அரசில் சிவசேனாவை சேர்ந்த 3 பேருக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்க வாய்ப்பு


மோடி அரசில் சிவசேனாவை சேர்ந்த 3 பேருக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்க வாய்ப்பு
x
தினத்தந்தி 26 May 2019 11:30 PM GMT (Updated: 2019-05-27T04:45:48+05:30)

மத்திய மந்திரி சபையில் அதிக இடங்களை பெற சிவசேனா தீவிரம் காட்டி வருகிறது. இதில் சிவசேனாவை சேர்ந்த 3 பேருக்கு மந்திரி பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மும்பை,

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் இடம்பெற்று இருந்த சிவசேனா மராட்டியத்தில் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற 2-வது பெரிய கட்சி சிவசேனா ஆகும்.

எனவே அந்த கட்சி மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபையில் அதிக இடங்களை பெற தீவிரம் காட்டி வருகிறது. சிவசேனா 2 கேபினட் மந்திரி, ஒரு இணை மந்திரி பதவியை கேட்டு பா.ஜனதாவுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

எனினும் பா.ஜனதா தற்போது ஒரே ஒரு கேபினட் அந்தஸ்து மந்திரி பதவியை மட்டும் சிவசேனாவுக்கு கொடுக்கும் என கூறப்படுகிறது. மராட்டியத்தில் சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு சிவசேனாவுக்கு மேலும் ஒரு கேபினட் அந்தஸ்து மற்றும் ஒரு இணை மந்திரி பதவியை வழங்க பா.ஜனதா முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எனவே சிவசேனாவை சேர்ந்த 3 பேர் மத்திய மந்திரி ஆவதற்கு வாய்ப்பு உள்ளது.

இந்தநிலையில் மத்திய மந்திரி பதவியை பெற சிவசேனா தலைவர்கள் மற்றும் எம்.பி.க்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

எனினும் சிவசேனா தலைவர்கள் சஞ்சய் ராவத், அனில் தேசாய், அவுரங்காபாத் தொகுதியில் தோல்வியை தழுவிய சந்திரகாந்த் கைரே, தென்மும்பையில் வெற்றி பெற்ற அரவிந்த் சாவந்த், யவத்மால் வாஷிம் எம்.பி. பாவனா காவ்லி, நிலேஷ் ரானேவை 2 முறை தோற்கடித்த சிந்துதுர்க் எம்.பி.விநாயக் ராவுத், தானே எம்.பி. ராஜன் விச்சாரே, தென்மத்திய மும்பை எம்.பி. ராகுல் செவாலே உள்ளிட்டவர்களில் 3 பேருக்கு மத்திய மந்திரி ஆகும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

Next Story