கால்நடை மருத்துவம் படிக்க ஆசையா?


கால்நடை மருத்துவம் படிக்க ஆசையா?
x
தினத்தந்தி 27 May 2019 4:09 PM IST (Updated: 27 May 2019 4:09 PM IST)
t-max-icont-min-icon

வளமான வாய்ப்புகள் கொண்ட கால்நடை அறிவியல் படிப்பில் சேர விரும்பினால் அதற்கு சரியான தருணம் இது.

நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட பின்பு, கால்நடை மருத்துவத்தின் மீதும், பிஸியோதெரபி உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகள் மீதும் ஏராளமானவர்களின் ஆர்வம் திரும்பியது. 

தமிழகத்தில், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், ஒரத்தநாடு மற்றும் நெல்லை ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவ கல்லூரிகள் உள்ளன. ஐந்தரை ஆண்டுகள் படிக்கும் இந்த படிப்புக்கு மொத்தம் 360 இடங்கள் உள்ளன.

கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்.), என்னும் இந்தப் பட்டப்படிப்புக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் 54 இடங்கள் தரப்படுகின்றன. மீதமுள்ள 306 இடங்களை மாநில அரசு நிரப்ப வேண்டும். அதேபோல, உணவுத் தொழில்நுட்ப படிப்பில் 40 இடங்களில், 6 இடங்கள் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த படிப்புகளுக்கு 2019-20-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, www.tanuvas.ac.in மற்றும் www2.tanuvas.ac.in ஆகிய இணைய தளங்களின் வழியே நடக்கிறது. மே 8-ம் தேதி காலை 10 மணி முதல் ஜூன் 10-ம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம். சான்றிதழ்களை ஆன்லைனிலேயே பதிவேற்ற வேண்டும். விண்ணப்ப கட்டணத்தையும் செலுத்தலாம்.

அல்லது விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தகுந்த சான்றிதழ்களுடன், ஒவ்வொரு படிப்புக்கான விண்ணப்பத்தையும் தனித்தனியாக, வரும் ஜூன் 10-ந் தேதி மாலை 5.45 மணிக்குள், “தலைவர், சேர்க்கை குழு (இளநிலை பட்டப்படிப்பு), தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம் பால்பண்ணை, சென்னை - 600051” என்ற முகவரிக்கு சென்றடையும் வகையில் அனுப்ப வேண்டும். விரிவான விவரங்களை மேற்குறிப்பிட்டுள்ள இணையதளங்களில் பார்க்கலாம்.

Next Story