கண்டலேறு அணையில் போதிய நீர் இல்லாததால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல்
கண்டலேறு அணையில் போதிய தண்ணீர் இருப்பு இல்லாததால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
செங்குன்றம்,
இதில் பூண்டி ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீர் சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்துவிடப்படும்.
கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின்படி ஆந்திர அரசு தமிழகத்துக்கு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி.யும், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரையும் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும்.
அதன்படி ஜனவரி முதல் மார்ச் வரை 2.280 டி.எம்.சி. தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது. கண்டலேறு அணையில் நீர் இருப்பு வெகுவாக குறைந்ததால் மார்ச் 26-ந் தேதி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு அடியோடு நிறுத்தப்பட்டது. நீர்வரத்து இல்லாததால் பூண்டி ஏரி வறண்டு வருகிறது.
பூண்டி ஏரியில் 3,231 மில்லியன் கன அடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியில் வெறும் 79 மில்லியன் கனஅடி தண்ணீர் தான் இருப்பில் உள்ளது. பூண்டியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாயில் வினாடிக்கு 18 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
கோடை வெயில் காரணமாக ஏரி வறண்டு வருவதால் இன்னும் சில நாட்களில் சென்னை குடிநீர் வாரியத்துக்கு தண்ணீர் திறப்பு முழுமையாக நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின்படி ஜூலை முதல் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். ஆனால் கண்டலேறு அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு சாத்தியப்படாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒரு வேளை மழை பெய்தால் தண்ணீர் திறப்பு குறித்து பரிசீலிக்கப்படும் என்று ஆந்திர அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story