அம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம், நகை கொள்ளை கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்மநபர்களுக்கு வலைவீச்சு


அம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம், நகை கொள்ளை கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 27 May 2019 10:30 PM GMT (Updated: 27 May 2019 5:33 PM GMT)

உத்திரமேரூரில் அம்மன் கோவில் உண்டியலை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சென்னை,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் எண்டத்தூர் செல்லும் சாலையில் மாவட்ட குற்றவியல் மற்றும் நடுவர் நீதிமன்றத்திற்கு வெகு அருகில் உள்ளது நூக்காளம்மன் கோவில். இங்கு வாரந்தோறும் அன்னதானமும், அமாவாசை மற்றும் பவுர்ணமி பூஜைகளும் நடைபெறுவது வழக்கம்.

இந்த கோவிலுக்கு உத்திரமேரூர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்துசெல்வது வழக்கம். இவ்வாறு வரும் பக்தர்கள் தங்களின் நேர்த்திக் கடனை பணமாகவும், நகைகளாகவும் இந்த கோவிலின் உண்டியலில் காணிக்கையாக போட்டுச்செல்வது வழக்கம்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் கோவிலை சுற்றிவந்து நோட்டமிட்டுள்ளனர். பின்னர் நைசாக கேட்டை திறந்து உள்ளே புகுந்து உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம் மற்றும் நகைகளை திருடிச்சென்றுள்ளனர். இந்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில் உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தாமரைபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் முரளி தரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

இதே கோவிலில் கடந்த ஆண்டும் இதேபோல் உண்டியலை உடைத்து மர்மநபர்கள் திருடிச்சென்றனர். குடியிருப்புகளுக்கு மத்தியிலும், கோர்ட்டுக்கு வெகு அருகிலும் உள்ள இந்த கோவிலில் தொடர்ச்சியாக கொள்ளையடிக்கப்படும் சம்பவம் பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story