12-வது மாடியில் இருந்து தவறி விழுந்து என்ஜினீயரிங் மாணவர் பலி


12-வது மாடியில் இருந்து தவறி விழுந்து என்ஜினீயரிங் மாணவர் பலி
x
தினத்தந்தி 28 May 2019 5:00 AM IST (Updated: 27 May 2019 11:46 PM IST)
t-max-icont-min-icon

திருப்போரூர் அருகே 12-வது மாடியில் இருந்து தவறி விழுந்து என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலியானார்.

ஆலந்தூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கம் அருகே பழைய மாமல்லபுரம் சாலையில் அமைந்துள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 12-வது மாடியில் நண்பர்களுடன் வசித்து வந்தவர் சல்மான் ஷரீப் (வயது 23). இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் காஜியார் பள்ளி பகுதி ஆகும்.

இவர் மாமல்லபுரம் அருகே பையனூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வெளியே சென்ற சல்மான் ஷரீப், வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அறையின் கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ‘பால்கனி’ வழியாக சமையல் அறைக்கு சென்று, வீட்டிற்குள் செல்ல முயன்றதாக தெரிகிறது.

அப்போது எதிர்பாராதவிதமாக 12-வது மாடியில் இருந்து தவறி கீழே முதல் தளத்தில் உள்ள சுவற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவரின் மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து கேளம்பாக்கம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே இன்ஸ்பெக்டர் பாண்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கல்லூரி மாணவன் கீழே விழுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா? கொலை செய்யப்பட்டாரா? செல்போன் பேசியபடி தவறி விழுந்தாரா? வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போன்று கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அதே கல்லூரியில் படித்து வந்த முகமது அஃப்ரீடி என்ற மாணவர் காலவாக்கத்தில் உள்ள 14-வது அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து இறந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story