பேரிகை அருகே பெண் கொலை: குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைப்பு
பேரிகை அருகே பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பேரிகை - தீர்த்தம் சாலையில் செட்டு என்ற வனப்பகுதி உள்ளது. இங்கு 30 வயது மதிக்கத்தக்க பெண் அரை நிர்வாணமாக முகம் மட்டும் எரிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் இரவு பிணமாக கிடந்தார். இது குறித்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர் சரவணனுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் இது குறித்து பேரிகை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அங்கு நீல நிற சுடிதார் அணிந்த இளம்பெண் அரை நிர்வாணமாக கொலையுண்டு கிடந்தார். அவரை கொலை செய்து உடலை வீசி சென்ற நபர்கள் முகம் அடையாளம் கண்டுவிடக்கூடாது என்பதற்காக பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளனர்.
அந்த பெண்ணின் காலில் மெட்டி இருந்ததால் அவர் திருமணமானவராக இருக்கலாம் என தெரிகிறது. இதைத் தொடர்ந்து போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் தனிப்படை அமைத்துள்ளார். அதில் ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி, பேரிகை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முருகேசன் மற்றும் போலீசார் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் கொலையான பெண் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story