பூந்தமல்லி அருகே தண்ணீர் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் சாலைமறியல்


பூந்தமல்லி அருகே தண்ணீர் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 28 May 2019 4:15 AM IST (Updated: 27 May 2019 11:45 PM IST)
t-max-icont-min-icon

பூந்தமல்லி அருகே ஆழ்குழாய் கிணறுகள் மூலம் தண்ணீர் எடுப்பதை கண்டித்து தண்ணீர் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

பூந்தமல்லி,

பூந்தமல்லி அருகே பானவேடுதோட்டம் ஊராட்சியில் பல்வேறு இடங்களில் ஆழ் குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு தண்ணீர் எடுத்து லாரிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனால் தங்கள் பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு தண்ணீரின் தன்மை மாறி விடுவதாக கூறி அப்பகுதி மக்கள் தண்ணீர் லாரிகளை சிறைபிடித்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து சாலைமறியலில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-

பானவேடுதோட்டம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 40 அடியில் தண்ணீர் வந்தது. தற்போது சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எடுப்பதற்காக வாங்கப்பட்ட உரிமத்தில் லாரிகள் மற்றும் டிராக்டர்கள் தண்ணீர் எடுத்து வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் நிலத்தடி நீர் பெரிதும் பாதிக்கப்பட்டு மஞ்சள் நிறத்தில் மாறி விட்டது. இதனால் குடிப்பதற்கு பயன்படுத்த முடியவில்லை.

இந்த நிலை நீடித்தால் இந்த பகுதியில் குடிநீர் பஞ்சம் ஏற்படும். எனவே உரிய அனுமதியின்றி செயல்பட்டு வரும் ஆழ்குழாய் கிணறுகளை மூட வேண்டும். இல்லையென்றால் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் பூந்தமல்லி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story