திருவாரூர் ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் வேண்டும் ரெயில் உபயோகிப்பாளர்கள் கோரிக்கை


திருவாரூர் ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் வேண்டும் ரெயில் உபயோகிப்பாளர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 27 May 2019 10:45 PM GMT (Updated: 27 May 2019 6:45 PM GMT)

திருவாரூர் ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று ரெயில் உபயோகிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்,

திருவாரூர் ரெயில் நிலையம் மிகவும் பழமை வாய்ந்த மற்றும் நீளமான ரெயில் நிலையமாகும். திருவாரூர் வழியாக ஆரம்பத்தில் மீட்டர் கேஜ் ரெயில் மட்டும் சென்று வந்த நிலையில் கடந்த 2007-ம் ஆண்டு அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டது.

திருவாரூர் ரெயில் நிலையம் வழியாக நாகூர், வேளாங்கண்ணி, காரைக்கால், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, பெங்களூரு ஆகிய இடங்களுக்கு பாசஞ்சர் ரெயில் சேவையும், காரைக்காலில் இருந்து எர்ணாகுளம், காரைக் காலில் இருந்து சென்னை, மன்னார்குடியில் இருந்து சென்னை ஆகிய இடங்களுக்கு திருவாரூர் வழியாக எக்ஸ்பிரஸ் ரெயில்களும் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இது தவிர பல்வேறு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில்களும் திருவாரூர் வழியாக இயக்கப்பட்டு வருகிறது.

ரெயில் உபயோகிப்பாளர்கள் கோரிக்கை

திருவாரூர் ரெயில் நிலையத்தில் இருந்து நாள்தோறும் ஏராளமான பயணிகள் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகிறார்கள். இதனால் இந்த ரெயில் நிலையத்தில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று ரெயில் உபயோகிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

திருவாரூர் ரெயில் நிலையம் வழியாக சென்று வரும் ரெயில்களில் நாள் ஒன்றுக்கு சுமார் 3 ஆயிரம் பயணிகள் சென்று வருகின்றனர். இந்த ரெயில் நிலையத்தில் மொத்தம் 5 நடைமேடைகள் உள்ளன. முதலாவது நடைமேடையில் இருந்து அனைத்து நடைமேடைகளுக்கும் சென்று வருவதற்கேற்ப நடைமேம்பாலம் உள்ளது. தற்போதுள்ள 2-வது மற்றும் 3-வது நடைமேடைகள் மிகவும் தாழ்வாக உள்ளது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த நடைமேடையில் ரெயிலில் ஏறவும், இறங்கவும் மிகவும் சிரமப்படுகின்றனர்.

மேற்கூரை

மேலும் நடைமேடைகளில் குறிப்பிட்ட தூரத்திற்கு மட்டுமே மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. மழை மற்றும் வெயில் காலங்களில் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். முதல் நடைமேடையைத்தவிர அனைத்து நடைமேடைகளிலும் கழிப்பிட வசதிகள் இல்லாமல் உள்ளது. முதல் நடைமேடையின் கடைசியில் இருப்புப்பாதை போலீஸ் நிலையம் அருகே கழிப்பிடம் உள்ளதால் ரெயில் உபயோகிப்பாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டும்.

இவ்வாறு ரெயில் உபயோகிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

Next Story