தர்மபுரி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் செந்தில்குமார் தலைவர்கள் சிலைக்கு மரியாதை


தர்மபுரி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் செந்தில்குமார் தலைவர்கள் சிலைக்கு மரியாதை
x
தினத்தந்தி 28 May 2019 3:30 AM IST (Updated: 28 May 2019 12:19 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் செந்தில்குமார் தர்மபுரியில் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தர்மபுரி, 

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செந்தில்குமார் சென்னை சென்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகி களை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் அவர் தர்மபுரிக்கு வந்தார். அவருக்கு மாவட்ட எல்லையான காரிமங்கலத்தில் தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது வீரப்பன் மனைவி முத்துலட்சுமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

இதை தொடர்ந்து தி.மு.க. மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ., தலைமையில் தி.மு.க. வேட்பாளர் செந்தில்குமார் தர்மபுரியில் உள்ள பெரியார், அண்ணா, காமராஜர், அம்பேத்கர் ஆகிய தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது ஏராளமான கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அதன் பின்னர் தர்மபுரி பைபாஸ் ரோடு அதியமான் அரண்மனை எதிரில் உள்ள தி.மு.க. தேர்தல் அலுவலகத்தில் செந்தில்குமாருக்கு வரவேற்பு கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சிகளில் தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் மாதையன், மாவட்ட துணை செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி, காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் கோவி.சிற்றரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ஜெயந்தி, தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் தவமணி, திராவிட கழக மாநில நிர்வாகி ஊமை ஜெயராமன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் தேவராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் குமார், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் தங்கராஜ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story