தாளவாடி அருகே தோட்டத்தில் பதுங்கி இருந்த புலி தானாக வனப்பகுதிக்குள் சென்றது


தாளவாடி அருகே தோட்டத்தில் பதுங்கி இருந்த புலி தானாக வனப்பகுதிக்குள் சென்றது
x
தினத்தந்தி 28 May 2019 4:15 AM IST (Updated: 28 May 2019 12:26 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஜீர்ஹள்ளி வனச்சரகம் உள்ளது.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஜீர்ஹள்ளி வனச்சரகம் உள்ளது. இந்த வனச்சரகத்துக்கு உள்பட்ட சிமிட்டஹள்ளி கிராமத்தை சேர்ந்த ராஜா, மூர்த்தி அந்த பகுதியில் உள்ள தங்களுடைய தோட்டங்களை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் காலை சென்றனர். அப்போது தோட்டத்தில் உள்ள ஒரு புதரில் இருந்து புலி உறுமி கொண்டிருந்ததை பார்த்தனர். இதுபற்றி தகவல் அறிந்த வனச்சரகர் காண்டீபன், வன ஊழியர்கள் உள்ளிட்டோர் அங்கு சென்று புதரில் பதுங்கி இருந்த புலியை பார்த்தனர்.

இதைத்தொடர்ந்து மயக்க ஊசி செலுத்தி புலியை பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். அப்போது மழை பெய்ய தொடங்கியது. மேலும் இருட்டவும் தொடங்கிவிட்டது. இதனால் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இரவில் ராஜாவின் தோட்டத்தில் கூண்டு வைத்து உள்ளே ஆட்டு குட்டியை கட்டியிருந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை வனச்சரகர், கால்நடை டாக்டர் அசோகன் ஆகியோர் கூண்டு அமைக்கப்பட்டு இருந்த இடத்துக்கு சென்று பார்த்தனர். ஆனால் புலி கூண்டுக்குள் சிக்கவில்லை. புதருக்குள்ளும் காணவில்லை. இதைத்தொடர்ந்து வனத்துறையினர் தோட்டத்தில் பதிவாகியிருந்த புலியின் கால்தடத்தை வைத்து அது எங்கே சென்றது என்று பார்த்தபடி சென்றனர். அப்போது அங்கிருந்து சுமார் 4½ கி.மீ. தூரத்தில் உள்ள ஜீர்ஹள்ளி வனப்பகுதி வரை கால் தடம் சென்றது தெரிந்தது. இதனால் ஜீர்ஹள்ளி வனப்பகுதிக்குள் புலி தானாக சென்றுவிட்டதை வனத்துறையினர் உறுதிப்படுத்தினர். இதைத்தொடர்ந்து சிமிட்டஹள்ளி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.


Next Story