வேடசந்தூர் அருகே பட்டப்பகலில் துணிகரம், டாஸ்மாக் மேற்பார்வையாளரை தாக்கி ரூ.4 லட்சம் பறிப்பு


வேடசந்தூர் அருகே பட்டப்பகலில் துணிகரம், டாஸ்மாக் மேற்பார்வையாளரை தாக்கி ரூ.4 லட்சம் பறிப்பு
x
தினத்தந்தி 28 May 2019 4:15 AM IST (Updated: 28 May 2019 12:27 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே பட்டப்பகலில் டாஸ்மாக் மேற்பார்வையாளரை தாக்கி ரூ.4 லட்சத்து 29 ஆயிரத்தை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வேடசந்தூர், 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அழகாபுரியில் டாஸ்மாக் மதுபானகடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருபவர் வெள்ளைச்சாமி (வயது 46). நேற்று மதியம் இவர், கடந்த 2 நாட்களில் கடையில் வசூலான ரூ.4 லட்சத்து 29 ஆயிரத்தை எடுத்து கொண்டு வேடசந்தூரில் உள்ள ஒரு வங்கியில் செலுத்துவதற்காக ஸ்கூட்டரில் சென்றார்.

கோவிலூர்-வேடசந்தூர் சாலையில் தமுத்துப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் வெள்ளைச்சாமியை தாக்கி கீழே தள்ளி விட்டனர். இதில் வெள்ளைச்சாமிக்கு முகம், கால் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. அவர் சுதாரிப்பதற்குள் மர்மநபர் ஒருவர் பணத்துடன் இருந்த ஸ்கூட்டரை எடுத்து கொண்டு புறப்பட்டார்.

மற்றொரு நபர், தான் வந்த மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றார். இதற்கிடையே அந்த வழியாக வந்தவர்கள், வெள்ளைச்சாமியை மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.பின்னர் நடந்த சம்பவம் குறித்து வெள்ளைச்சாமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், வெள்ளைச்சாமி டாஸ்மாக் மதுக்கடையில் இருந்து பணம் கொண்டு வருவதை நோட்டமிட்டு மர்மநபர்கள் கைவரிசையை காட்டியது தெரியவந்தது. இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். வேடசந்தூரில் பட்டப்பகலில் டாஸ்மாக் மேற்பார்வையாளரை தாக்கி பணத்தை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story