விலை நிர்ணயம் செய்வதில் குளறுபடி: கோழிப்பண்ணைகளில் 15 கோடி முட்டை தேக்கம்
நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கான விலையை நிர்ணயம் செய்வதில் குளறுபடி ஏற்பட்டு இருப்பதால், கோழிப்பண்ணைகளில் சுமார் 15 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்து இருப்பதாக உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் மோகன் கூறினார்.
நாமக்கல்,
நாமக்கல் மண்டல முட்டை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் மோகன் நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாமக்கல் மண்டலத்தில் தினசரி சுமார் 3½ கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டைகளுக்கு வாரம் 3 முறை விலை நிர்ணயம் செய்து வரும் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு, அருகாமையில் உள்ள மண்டலங்களில் விலையை அனுசரித்து விலை நிர்ணயம் செய்வது இல்லை. இதனால் பண்ணையாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
தற்போது ஐதராபாத் மண்டலத்தில் 310 காசுக்கும், பெங்களூருவில் ஒருமுட்டை 290 காசுக்கும் கிடைக்கிறது. ஆனால் நாமக்கல் மண்டலத்தில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு ஒரு முட்டையின் விலையை 390 காசுகள் என நிர்ணயம் செய்து உள்ளது. இதனால் தமிழகத்தை சேர்ந்த முட்டை வியாபாரிகள் பெங்களூரு சென்று முட்டைகளை வாங்கி வருகிறார்கள். இதன் காரணமாக நாமக்கல் மண்டலத்தில் முட்டைகள் தேக்கம் அடைந்து வருகிறது. எனவே இங்குள்ள பண்ணைகளில் சுமார் 12 கோடி முதல் 15 கோடி முட்டைகள் தேங்கி உள்ளது.
நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் 340 காசுக்கு முட்டையை விற்பனை செய்கிறோம். இந்த விலைக்கு கூட வியாபாரிகள் வாங்க மறுக்கிறார்கள்.
தற்போது வெயில் அதிகமாக இருப்பதால், 15 நாட்களுக்கு மேல் முட்டைகளை பண்ணைகளில் இருப்பு வைக்க முடியாது. பண்ணையாளர்களின் கருத்துகளை கேட்டு அதற்கேற்ப தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு விலை நிர்ணயம் செய்வது இல்லை. பலமுறை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகளிடம் கூறியும் விலை நிர்ணய பிரச்சினையை தீர்க்க முன்வரவில்லை.
முட்டை விலை நிர்ணயத்தில் ஏற்பட்டு உள்ள குளறுபடி குறித்து நாமக்கல் எம்.பி. சின்ராஜையும் சந்தித்து பேச இருக்கிறோம். தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்யும் விலை 390 காசாக இருப்பதால், கடைகளில் ஒரு முட்டை 450 காசுக்கு விற்பனையாகிறது. விலை அதிகமாக இருப்பதால் முட்டையின் விற்பனை தமிழகம், கேரளாவில் குறைந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story