மாவட்டத்தில் சட்டவிரோதமாக மின் மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சினால் கடும் நடவடிக்கை


மாவட்டத்தில் சட்டவிரோதமாக மின் மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சினால் கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 28 May 2019 3:45 AM IST (Updated: 28 May 2019 12:44 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மின் மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் ரோகிணி தெரிவித்துள்ளார்.

சேலம், 

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 10-ந் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டது. இதனால் கலெக்டர் அலுவலகங்களில் வாரந்தோறும் திங்கட் கிழமை நடத்தப்படும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படவில்லை.

இந்தநிலையில், தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதனால் கலெக்டர் அலுவலகங்களில் வழக்கம்போல் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்தில் வழக்கம்போல் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை கலெக்டர் ரோகிணியிடம் வழங்கினர். பின்னர் அவர் அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுத்து தீர்வுகாணுமாறு கேட்டுக்கொண்டார். முன்னதாக கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், மனு கொடுக்க வந்தவர்களை தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே செல்ல அனுமதித்தனர்.

இதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் வரிசையாக அமர வைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளிகளிடம் கலெக்டர் ரோகிணி குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். மேலும், அவர் கடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் மனு அளித்த மாற்றுத்திறனாளிகள் சிலருக்கு நலதிட்ட உதவித்தொகைகளை வழங்கினார்.

சேலம் மாவட்டத்தில் தற்போது கோடை காலத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் ரோகிணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் பொதுமக்களின் முக்கிய பிரச்சினையாக குடிநீர் பிரச்சினை இருந்து வருகிறது. இந்த குடிநீர் பிரச்சினையை தீர்க்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்கள் அனைவரும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். குடிநீர் தொடர்பான புகார்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து முறையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதிக குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க தனிக்குழு அமைக்கப் பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் சட்டத்துக்கு புறம்பாக தண்ணீரை எடுத்தாலோ அல்லது விலைக்கு விற்றாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர, சட்ட விரோதமாக பொதுமக்கள் தங்களது வீடுகளில் மின் மோட்டார் பொருத்தி அதன்மூலம் குடிநீரை உறிஞ்சக் கூடாது. அவ்வாறு குடிநீரை உறிஞ்சுவது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, தானாக முன்வந்து மின் மோட்டார்களை அகற்ற வேண்டும்.

இந்த ஆண்டு ஏற்காடு மலர்கண்காட்சி சிறப்பாக நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக செயல் படுத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறு கலெக்டர் ரோகிணி கூறினார்.

Next Story