கணவருடன், ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறித்த 2 பேர் கைது


கணவருடன், ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறித்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 28 May 2019 3:45 AM IST (Updated: 28 May 2019 12:45 AM IST)
t-max-icont-min-icon

பட்டுக்கோட்டை அருகே கணவருடன் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பறித்து சென்ற 2 பேரை 9 மாதங்களுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.

பட்டுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள கருங்குழிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் மோகன் குமாரமங்கலம்(வயது 45). இவருடைய மனைவி புவனேஸ்வரி(42). மோகன் குமாரமங்கலம் தனது மனைவியுடன் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி காலை ஸ்கூட்டரில் பட்டுக்கோட்டைக்கு சென்று கொண்டிருந்தார்.

பட்டுக்கோட்டையை அடுத்த கொண்டிகுளம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், புவனேஸ்வரியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறித்து சென்றனர்.

இதுகுறித்து மோகன் குமாரமங்கலம் பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலியை பறித்து சென்ற 2 பேரை தேடி வந்தனர்.

2 பேர் கைது

இந்த நிலையில் நேற்று காலை பட்டுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் பட்டுக்கோட்டை வளவன்புரம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது போலீசாரை கண்டதும் அங்கு நின்று கொண்டிருந்த 2 பேர் ஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், பட்டுக்கோட்டை கரிக்காடு அண்ணா நகரை சேர்ந்த அல்லாபிச்சை(24), பட்டுக்கோட்டை தங்கவேல் நகரை சேர்ந்த அன்பரசன்(24) என்பதும், இவர்கள் இருவரும் புவனேஸ்வரியிடம் இருந்து 5 பவுன் சங்கிலியை பறித்து சென்றதும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்து பட்டுக்கோட்டை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Next Story