சிறுகளத்தூர் டாஸ்மாக்கடையை அகற்ற கோரி கிராம மக்கள் மனு


சிறுகளத்தூர் டாஸ்மாக்கடையை அகற்ற கோரி கிராம மக்கள் மனு
x
தினத்தந்தி 28 May 2019 4:30 AM IST (Updated: 28 May 2019 1:07 AM IST)
t-max-icont-min-icon

செந்துறை அருகே உள்ள டாஸ்மாக்கடையை அகற்ற கோரி கிராம மக்கள் கலெக்டர் விஜயலட்சுமியிடம் மனு அளித்துள்ளனர்.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, தொகுப்பு வீடுகள், திருமண நிதியுதவித் திட்டம் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 156 மனுக்களை பெற்ற கலெக்டர், மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அப்போது செந்துறை அருகே உள்ள சிறுகளத்தூர் கிராமத்தை சேர்ந்த பெண்கள் சிலர் கொடுத்த மனுவில், செந்துறை அருகே உள்ள சிறுகளத்தூர் கிராமத்தில் பெரியாக்குறிச்சி சாலையில் முந்திரிவயலில் அரசு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.

இந்த டாஸ்மாக் கடையால் வயல்களுக்கு செல்லும் பெண்கள், பள்ளிக்கு சென்றுவரும் மாணவிகள் மது அருந்துபவர்களால் பல்வேறு இடையூறுகளை சந்திக்கின்றனர். பள்ளிக்கு செல்லவே அச்சப்படும் சூழல் உள்ளது. அண்மையில், டாஸ்மாக் கடையை திறக்க விடாமல் தடுத்த போது, செந்துறை போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் கடந்த 24-ந் தேதிக்கு பிறகு கடை இப்பகுதியில் இயங்காது என்று உறுதியளித்தனர்.

டாஸ்மாக் கடையை...

ஆனால் அந்த டாஸ்மாக் கடை மீண்டும் அதே இடத்தில் இயங்கி வருகிறது. எனவே டாஸ்மாக் கடையை அப்பகுதியிலிருந்து உடனடியாக அகற்றி பெண்களின் தாலியையும், மாணவ- மாணவிகளின் படிப்பையும் காக்க வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.

அதேபோல் நுகர்வோர் விழிப்புணர்வு சேவை சங்க தலைவர் வரதராசன்அளித்த மனுவில், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தற்போது மாவட்டத்தில் அனைத்து கடைகளிலும் தங்கு தடையின்றி விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக கடைகளை ஆய்வு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

திருமானூர் அருகே உள்ள கண்டராதித்தம் செம்பியன் மாதேவிபேரேரியை தூர்வார நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று திருமானூரை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் பாஸ்கர், கருப்பையன் ஆகியோர் கலெக்டரிடம் மனு அளித்தனர். இந்த கூட்டத்தில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story