சத்திரமனை மகாசக்தி மாரியம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்


சத்திரமனை மகாசக்தி மாரியம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
x
தினத்தந்தி 28 May 2019 4:00 AM IST (Updated: 28 May 2019 1:24 AM IST)
t-max-icont-min-icon

சத்திரமனை மகாசக்தி மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூரை அடுத்துள்ள சத்திரமனை கிராமத்தில் பிரசித்தி பெற்ற மகாசக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தேர் திருவிழா கடந்த 19-ந் தேதி மாரியம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. கடந்த 21-ந் தேதி மறுகாப்பு கட்டப்பட்டது. கடந்த 24, 25, 26-ந் தேதிகளில் இரவு அம்மன் ஒவ்வொரு வாகனத்தில் வீதிஉலா வந்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலையில் மகாசக்தி மாரியம்மனுக்கு மஞ்சள், பன்னீர், தயிர், சந்தனம் உள்பட பல்வேறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து வாண வேடிக்கை, நாதஸ்வர இசை செண்டை மேளம் முழங்க மகாசக்தி மாரியம்மன் அலங்கரிக்கப்பட்டிருந்த தேரில் எழுந்தருள செய்யப்பட்டது. பின்னர் திருஷ்டி பூஜைகள் நடைபெற்றதும், வாணவேடிக்கையுடன் கிராம முக்கியஸ்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

திரளான பக்தர்கள் தரிசனம்

அதை தொடர்ந்து திரளான பக்தர்கள் பக்தி கோஷத்துடன் பக்தி பாடல்கள் பாடிய படி, தேரோடும் முக்கிய வீதிகள் வழியாக தேரை வடம் பிடித்து இழுத்து வந்து, பின்னர் நிலையத்தை வந்தடைந்தனர். தேரோட்ட விழாவில் சத்திரமனை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் அம்மனை தரிசனம் செய்தனர். முன்னதாக நேற்று காலை பக்தர்கள் நேர்த்தி கடனாக கோவிலுக்கு அக்னி சட்டி ஏந்தி வந்தனர். மாலையில் பக்தர்கள் அலகு குத்தியும், பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் பெரம்பலூர் போலீசார் ஈடுபட்டனர். இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் மஞ்சள் நீராட்டு விழாவும், குடிவிடுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நாளை (புதன் கிழமை) இரவில் நல்ல செல்லியம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா வருகிறார். 

Next Story