விவசாயிகளின் நகை கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் சங்க கூட்டத்தில் தீர்மானம்


விவசாயிகளின் நகை கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் சங்க கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 28 May 2019 3:30 AM IST (Updated: 28 May 2019 2:02 AM IST)
t-max-icont-min-icon

வங்கியில் உள்ள விவசாயிகளின் நகை கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோவில்பட்டியில் நடந்த சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவில்பட்டி, 

தமிழ் விவசாயிகள் சங்கத்தின் தென்மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோட்டில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்தது. விவசாயிகள் சங்க மாநில தலைவர் நாராயணசாமி தலைமை தாங்கினார். மதுரை மாவட்ட தலைவர் சுப்பையா, மாநில துணை தலைவர் நம்பிராஜன், தூத்துக்குடி மாவட்ட மகளிர் அணியை சேர்ந்த கிருஷ்ணம்மாள் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

தென்மாவட்டங்களில் விவசாயிகள் பயிர் செய்த மக்காச்சோள பயிர்களில் படைப்புழுக்கள் தாக்கி, விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இந்த விவசாயிகளுக்கு மானாவாரி நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.3 ஆயிரமும், நஞ்சை நிலங்களுக்கு ரூ.5 ஆயிரத்து 500-ம் இழப்பீடாக வழங்க உத்தரவிட்ட பின்னரும் வழங்கப்படவில்லை. இது ஏமாற்றமாக உள்ளது. விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். தமிழக விவசாயிகள் போதிய மழை இல்லாமல் கடும் வறட்சியை சந்தித்து வருகிறார்கள். விவசாயிகள் நகைகளை வங்கியில் அடகு வைத்து மீண்டும் விவசாயம் செய்து நஷ்டம் அடைந்துள்ளனர். எனவே தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள விவசாயிகளின் நகை கடன்களை தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.

மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில், அவைத்தலைவர் வெங்கடசாமி, எட்டயபுரம் தாலுகா தலைவர் பிரதீப், தூத்துக்குடி மேற்கு மாவட்ட தலைவர் வெள்ளத்துரை, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சுந்தரராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story