அறுந்து கிடந்த உயர் மின்அழுத்த கம்பியில் மிதித்தனர்: மின்சாரம் தாக்கி தந்தை-மகன் சாவு
விஜயாப்புரா அருகே அறுந்து கிடந்த உயர் மின்அழுத்த கம்பியில் மிதித்ததால் மின்சாரம் தாக்கி தந்தை-மகன் பரிதாபமாக இறந்தனர்.
பெங்களூரு,
விஜயாப்புரா மாவட்டம் பசவனபாகேவாடி தாலுகா பசவனஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் ருக்மித்தின் பொம்மனஹள்ளி (வயது 50). இவருடைய மகன் ஜாவித் பொம்மனஹள்ளி (25). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் அந்தபகுதியில் உள்ள தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர்.
பின்னர் அவர்கள் வேலையை முடித்துவிட்டு இரவில் வீடு திரும்ப புறப்பட்டனர். அப்போது அந்தப் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்தது.
இதை அறியாத ருக்மித்தின், அறுந்து கிடந்த உயர் அழுத்த மின்கம்பியில் மிதித்தார். இதனால் அவரை மின்சாரம் தாக்கியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜாவித், அவரை காப்பாற்ற முயன்றார். இதனால், அவரையும் மின்சாரம் தாக்கியது. சிறிது நேரத்தில் அவர்கள் 2 பேரும் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் பசவனபாகேவாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ருக்மித்தின் மற்றும் ஜாவித் ஆகியோர்களின் உடல்களை மீட்டனர். பின்னர் அவர்களது உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இதுபற்றிய புகாரின் பேரில் பசவனபாகேவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் நேற்று அந்தபகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story