கள்ளக்குறிச்சி, செஞ்சி பகுதியில், குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்


கள்ளக்குறிச்சி, செஞ்சி பகுதியில், குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 28 May 2019 4:34 AM IST (Updated: 28 May 2019 4:34 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மற்றும் செஞ்சி பகுதியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி நகராட்சி 12-வது வார்டு அண்ணாநகரில் உள்ள அசோக் தெரு, கட்டபொம்மன் தெரு ஆகிய பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் தேவைக்காக அதே பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு, நகராட்சி சார்பில் தெருக்குழாய் மூலம் தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த 2 வாரத்திற்கும் மேலாக அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் குடிநீர் வினியோகம் செய்யக்கோரி நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

இதன் காரணமாக இப்பகுதி மக்கள் குடிநீருக்காக காலி குடங்களுடன் அருகில் உள்ள பகுதிகளுக்கு சென்று தண்ணீர் பிடித்து வந்து பயன்படுத்தி வந்தனர். மேலும் சிலர் குடிநீரை விலை கொடுத்து வாங்கியும் பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில் குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பெண்கள் காலி குடங்களுடன் நேற்று காலை 10 மணிக்கு நகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு சென்றனர். பின்னர் அவர்கள் குடிநீர் வழங்கக்கோரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது நகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகள் யாரும் இல்லாததால் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு, நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள கள்ளக்குறிச்சி- சேலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த நகராட்சி பணி மேற்பார்வையாளர் கோபி, சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது பெண்கள், எங்கள் பகுதியில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. அதனால் உடனே குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

அதற்கு பணி மேற்பார்வையாளர் கோபி, அதிகாரிகளிடம் பேசி உடனே குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதனை ஏற்றுக் கொண்ட பெண்கள், சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் கள்ளக்குறிச்சி-சேலம் சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல் செஞ்சி பகுதியிலும் போராட்டம் நடந்தது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

செஞ்சி அடுத்த வல்லம் ஒன்றியத்திற்கு உட்பட்டது வீராணமூர் கிராமம். இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அந்த பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து மின்மோட்டார் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் நிரப்பி, அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாக, ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் இல்லாமல் போனது. இதனால் இவர்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் பணி பாதிக்கப்பட்டு, கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி ஒன்றிய அதிகாரிகளிடம் கிராம மக்கள் முறையிட்டும், இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலை கிராமத்தில் நாட்டார்மங்கலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த வல்லம் வட்டார வளர்ச்சி அலுவலர் குலோத்துங்கன், துணை வட்டார வளர்ச்சி அலுவவர் சரவணகுமார் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில், அங்குள்ள ஏரியில் போடப்பட்டுள்ள புதிய ஆழ்துளை கிணற்றில் இருந்து, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றும் வகையில் புதிதாக குழாய் அமைக்கும் பணியை உடனடியாக மேற்கொண்டு, குடிநீர் வினியோகம் செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

இதையேற்று அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story