மாவட்ட செய்திகள்

காட்டு யானை தாக்கி பள்ளி மாணவி உள்பட 2 பேர் சாவு, கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் கண்காணிப்பு + "||" + Wild elephant attacked 2 dead, including a school student

காட்டு யானை தாக்கி பள்ளி மாணவி உள்பட 2 பேர் சாவு, கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் கண்காணிப்பு

காட்டு யானை தாக்கி பள்ளி மாணவி உள்பட 2 பேர் சாவு, கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் கண்காணிப்பு
காட்டு யானை தாக்கி பள்ளி மாணவி உள்பட 2 பேர் இறந்த சம்பவத்தை தொடர்ந்து கும்கி யானைகள் உதவியுடன் காட்டு யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
பொள்ளாச்சி,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆழியாறு வனப்பகுதி நவமலைபதியில் மலைவாழ் மக்கள் சுமார் 45 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ரஞ்சனாவை (வயது 7) கடந்த 24-ந் தேதி காட்டு யானை தாக்கியது. இதில் அவள் பரிதாபமாக இறந்தாள். இந்த சோகம் மறைவதற்கு மறுநாள் 25-ந் தேதி இரவு மகாளி (55) என்கிற கூலி தொழிலாளியை காட்டு யானை மிதித்து கொன்றது.

இந்த தொடர் சம்பவத்தால் நவமலைபதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் பீதி அடைந்தனர். இதற்கிடையில் நேற்று முன்தினம் நிவாரண நிதி கொடுக்க சென்ற வனத்துறை அதிகாரிகளை மலைவாழ் மக்கள் முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள், காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை இழப்பீடு தொகையை பெற மாட்டோம் என்றனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை ஏற்று மலைவாழ் மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் நவமலைபதி பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானையை விரட்டுவதற்கு புலிகள் காப்பக கள இயக்குனர் கணேசன் உத்தரவின் பேரில் துணை இயக்குனர் மாரிமுத்து மேற்பார்வையில் வனச்சரகர் காசிலிங்கம் தலைமையில் வனவர், வனக்காப்பாளர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் 30 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த குழுவினர் 3 வாகனங்களில் தலா 10 பேர் வீதம் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் நேற்று அதிகாலை 2 மணிக்கு காட்டு யானை மீண்டும் மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிக்கு வந்தது. இதை அறிந்த வனத் துறையினர் மின்விளக்குகளை அசைத்தும், வாகனங்களில் உள்ள சைரன் ஒலி எழுப்பியும், பட்டாசுகளை வெடித்தும்யானையை விரட்டினர்.

இந்த நிலையில் உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப் கோழிக்கமுத்தி முகாமில் இருந்து பரணி என்ற கும்கி யானை நேற்று முன்தினம் இரவு அழைத்து வரப்பட்டது. நேற்று மதியம் 1 மணிக்கு சுயம்பு என்ற மற்றொரு கும்கி யானையும் வரவழைக்கப்பட்டது. கும்கி யானையுடன் உலாந்தி வனச்சரகத்தை சேர்ந்த வனத்துறையினர், பாகன்கள் உள்பட 10 பேர் காட்டு யானையின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

நவமலைபதி பகுதியில் இதுவரைக்கும் காட்டு யானை தாக்கி யாரும் இறந்தது இல்லை. தற்போது தான் பள்ளி மாணவி உள்பட 2 பேர் காட்டுயானை தாக்கி இறந்துள்ளனர். எனவே காட்டு யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க 30 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் பகல் நேரங்களில் வனப்பகுதிக்குள் சென்று யானை எந்த பகுதியில் நிற்கிறது என்பதை கண்காணித்து வருகிறார்கள்.

இன்று (நேற்று) காலை 8 மணிக்கு ஆதாளியம்மன் கோவில் அருகில் காட்டு யானைநிற்பதை சிலர் பார்த்து உள்ளனர். ஆனால் அதன்பிறகு அந்த யானை எங்கு சென்றது என்பது தெரியவில்லை. இருப்பினும் யானை வழக்கமாக வரும் பாதையில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் கும்கி யானைகள் தற்போது நவமலைபதியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

இரவு நேரங்களில் மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் கும்கிகள் நிறுத்தி வைக்கப்படும். இதற்கிடையில் காட்டு யானையின் நடமாட்டத்தை நன்கு அறிந்த பிறகு, யானை வரும் வழித்தடத்தில் கும்கி யானைகள் நிறுத்தப்படும். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மலைவாழ் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மாலை 6 மணிக்கு பிறகு யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது.

யானையை பார்த்தால் தொந்தரவு செய்ய கூடாது. மேலும் மலைவாழ் மக்கள் குடியிருப்பில் உள்ளவர்களை தற்காலிகமாக மாலை 6 மணிக்கு பிறகு நவமலைபதி மின்வாரிய குடியிருப்பில் உள்ள பள்ளி அருகில் உள்ள கட்டிடத்தில் தங்க வைக்கப்படுகின்றனர்.

ஆழியாறு அணை மற்றும் நவமலைபதி பகுதியில் காட்டு யானை சுற்றி திரிவதால் சுற்றுலா பயணிகள் அணைக்குள் இறங்க கூடாது. நவமலைபதி ஆறு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அத்துமீறி நுழைவதை தடுக்க வனத்துறையினர் குரங்கு நீர்வீழ்ச்சி பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தனியார் தோட்டத்தில் குடிசை வீடுகள் உள்ளன. அங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு காட்டு யானை புகுந்து சேதத்தை ஏற்படுத்தியது. அப்போது வனச்சரகர் மற்றும் வனத்துறையினர் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சிலர் குடிபோதையில் யானை வரும் போது கல்வீசிதொந்தரவு செய்கின்றனர். இதன் காரணமாக தான் யானை திருப்பி தாக்குகிறது. எனவே வனவிலங்குகளை தொந்தரவு செய்ய கூடாது.

காட்டுயானை தாக்கி இறந்தவர்களுக்கு தற்போது முதல் தவணையாக ரூ.50 ஆயிரம் நிதி வழங்கப்பட்டு உள்ளது. இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ் மற்றும் தாலுகா அலுவலகத்தில் எந்தவித நிதியும் பெறவில்லை என்பது போன்ற ஆவணங்களை கொடுத்த பிறகு 2 பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் நிதி வழங்கப்படும். காட்டு யானை நவமலைபதி பகுதியை விட்டு வேறு பகுதிக்கு செல்லும் வரை ரோந்து மற்றும் கண்காணிப்பு பணி தொடரும். மலைவாழ் மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. வால்பாறை ரோட்டில் சுற்றுலா பயணிகள் கவனமாக செல்ல வேண்டும். கோடை காலம் என்பதால் வனப்பகுதிக்குள் இருந்து வனவிலங்குகள் தண்ணீர் குடிக்க சாலையை கடந்து அணைக்கு வர கூடும். எனவே சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளை புகைப்படம் எடுக்கவோ, தொந்தரவு செய்யவோ கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.