வைகை ஆற்றில் 40 டன் குப்பைகள் அகற்றம் மாநகராட்சி நடவடிக்கை
மதுரை வைகை ஆற்றில் 40 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.
மதுரை,
மதுரை மாநகராட்சி சார்பில் பெத்தானியாபுரம் காமராஜர் பாலம் முதல் குருவிக்காரன் சாலை வரை உள்ள வைகை ஆற்றில் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு இருபுறங்களிலும் தீவிர தூய்மைப்பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது. 800 துப்புரவு தொழிலாளிகள் உள்பட 977 மாநகராட்சி பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த பணியில் 16 டிராக்டர்கள், 8 ஜே.சி.பி. எந்திரங்களும், 20 பேட்டரி வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டன. வைகை ஆற்று கரையோரம் வசிக்கும் மக்கள் குப்பைகளை அங்கு கொட்டக்கூடாது என்பதனை வலியுறுத்தி விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. மேலும் அந்த பகுதி மக்கள் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதற்கு வசதியாக 2 ஆயிரம் வீடுகளுக்கு நீலம் மற்றும் பச்சை நிற குப்பை தொட்டிகளை மாநகராட்சி கமிஷனர் விசாகன் வழங்கினார்.
காலை முதல் மாலை வரை நடந்த இந்த துப்புரவு பணியில் மொத்தம் 40 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் துணை கமிஷனர் குமரேஸ்வரன், நகர்நல அலுவலர் (பொறுப்பு) மரு.சரோஜா, நகரமைப்பு அலுவலர் ரங்கநாதன், உதவி கமிஷனர்கள் முருகேச பாண்டியன், பழனிசாமி, நர்மதாதேவி, பிரேம்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.