காஞ்சீபுரம் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்சினையை போக்க நடவடிக்கை எடுக்க தி.மு.க. கோரிக்கை


காஞ்சீபுரம் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்சினையை போக்க நடவடிக்கை எடுக்க தி.மு.க. கோரிக்கை
x
தினத்தந்தி 29 May 2019 3:45 AM IST (Updated: 28 May 2019 11:45 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்சினையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையாவை காஞ்சீபுரம் எம்.பி. செல்வம், எம்.எல்.ஏ. எழிலரசன் ஆகியோர் நேற்று நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, காஞ்சீபுரம் நகராட்சி, காஞ்சீபுரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

புதிதாக ஆழ்துளை கிணறுகளை அமைத்து குடிநீர் பிரச்சினையை தீர்க்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்ல முடியாத நகராட்சி பகுதிகளுக்கு நகராட்சி தண்ணீர் லாரிகள் மூலமாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.

மேலும், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட திருப்பாற்கடல், ஓரிக்கை, பாலாற்று, செவிலிமேடு, வெங்கடாவரம் ஆகிய ஆற்றுப்பகுதியில் இருந்து ஆழ்துளை கிணறுகள் மூலம் நகராட்சிக்கு கொண்டு வந்து வினியோகிக்கும் குடிநீர் திட்டம் தற்போது உள்ள மக்கள் தொகைக்கு பற்றாக்குறையாக உள்ளது. மேலும் இந்த திட்டத்தில் குடிநீர் கொண்டு செல்லும் புதைவழிக்குழாய்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதால், நீர் 40 சதவீதத்திற்கு மேலாக வீணாகிறது. எனவே அந்த குழாய்களை புதிதாக மாற்றி அமைத்திட தேவைப்படும் நிதி ஆதாரத்தை பெறுவதற்கு, மானிய கோரிக்கைக்கு முன்பாகவே தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திட வேண்டும்.

நிரந்தர தீர்வாக திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் மாகரல் ஆற்றுப்பகுதியில் இருந்து ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வினியோகிக்கும் திட்டம் தயாரிக்க வேண்டும். மேலும், சட்டமன்றத்தில், இதுதொடர்பாக எழுப்பிய கேள்வியில், திருவண்ணாமலை சாத்தனூர் அணையில் இருந்து அரக்கோணம் வரை குடிநீர் கொண்டு செல்ல திட்டம் தயாரித்தல் நிலையை அறிந்து அத்திட்டத்தில் ஒரு பகுதியாக காஞ்சீபுரத்திற்கு நீட்டித்து வழங்க ஆவன செய்ய தமிழக அரசிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

எனவே இதுதொடர்பாக சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க உரிய அலுவலகத்திற்கு உத்தரவு வழங்கவும் அதனை நிறைவேற்றும் வகையிலும் அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்று தெரிவித்தார்.

Next Story