மயிலாடுதுறையில் தீ விபத்து: 7 வீடுகள் - ஓட்டல் எரிந்து நாசம் ரூ.10 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்


மயிலாடுதுறையில் தீ விபத்து: 7 வீடுகள் - ஓட்டல் எரிந்து நாசம் ரூ.10 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 28 May 2019 11:00 PM GMT (Updated: 28 May 2019 6:35 PM GMT)

மயிலாடுதுறையில் தீ விபத்தில் 7 வீடுகள் மற்றும் ஓட்டல் எரிந்து நாசமாகின. இதில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமடைந்தன.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை-திருவாரூர் சாலை கேணிக்கரை பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 80). இவர் தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள குப்பைகளை தீ வைத்து கொளுத்தினார். அப்போது எதிர்பாராத விதமாக குப்பையில் பற்றிய தீ அவரது வீட்டின் கூரையில் பிடித்தது. அதைத் தொடர்ந்து காற்றின் வேகத்தால் தீ மளமளவென அருகில் உள்ள வீடுகளுக்கு பரவியது.

இந்த தீ விபத்தில் லட்சுமி, குமார், தங்கமணி, வசந்தா, நூர்ஜஹான், யசோதா, ஜெயலட்சுமி ஆகியோரின் 7 வீடுகளும், செந்திலுக்கு சொந்தமான ஓட்டலும் எரிந்து நாசமாகின. இந்்த விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து நாசமடைந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் அன்பழகன் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மயிலாடுதுறை உதவி கலெக்டர் கண்மணி, போலீஸ் துணை சூப்பிரண்டு வெள்ளத்துரை, மயிலாடுதுறை தாசில்தார் மலர்விழி ஆகியோர் விசாரணை நடத்தினர்.

தீவிபத்தால் மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story