முதுமலையில், வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தீவிரம்
முதுமலையில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மசினகுடி,
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் சுமார் 688 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு 100-க்கும் மேற்பட்ட புலிகள், 80-க்கும் மேற்பட்ட சிறுத்தைப்புலிகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனவிலங்குகளுக்கு தேவையான மேம்பாட்டு பணிகளை செய்யவும், அவற்றின் எண்ணிக்கையை கண்காணிக்கவும் ஆண்டுக்கு 2 முறை கணக் கெடுப்பு நடத்தப்படுகிறது. தேசிய புலிகள் ஆணையத்தின் உத்தரவுபடி இந்த கணக்கெடுப்பு பணிகள் நடத்தபட்டு வருகிறது.
இந்த நிலையில் நடப்பு ஆண்டுக்கான முதல் கணக்கெடுப்பு பணி புலிகள் காப்பக மைய பகுதியில் உள்ள 321 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் முதற்கட்டமாக நடந்து முடிந்தது. இதனையடுத்து 2-வது கட்டமாக புலிகள் காப்பக வெளிமண்டலத்தில் உள்ள சிங்காரா, சீகூர், மசினகுடி வனச்சரகங்களில் உள்ள வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணி நேற்று அதிகாலை முதல் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த பணியில் வெளிமண்டல துணை கள இயக்குனர் ஜெயராஜ் மற்றும் வனச்சரகர்கள் காந்தன், மாரியப்பன் ஆகியோர் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்த குழுவினர் தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் வனப்பகுதிக்குள் சென்று புலிகள், சிறுத்தைப்புலிகள், காட்டுயானைகள், கரடிகள் என வனப்பகுதியில் தென்படும் வனவிலங்குகளை கணக்கெடுக்கின்றனர். இதுகுறித்த தகவல்களை தங்களது செல்போனில் உள்ள பிரத்யேக செயலியில் பதிவு செய்கின்றனர். இந்த பணி வருகிற 1-ந் தேதி மாலை வரை நடைபெறும். அதன் பின்னர் அனைத்து குழுவினரும் சேகரித்த தகவல்களை புலிகள் காப்பக உயர் அதிகாரிகளிடம் வழங்குவார்கள்.
அதன்பின்னர் புலிகள் காப்பக மைய பகுதி மற்றும் வெளிமண்டல பகுதியில் உள்ள வனவிலங்குகளின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் வெளியிடபடும்.
Related Tags :
Next Story