அரசு ஆஸ்பத்திரியில், மார்ட்டின் நிறுவன அதிகாரியின் உடல் மறுபிரேத பரிசோதனை - வீடியோ பதிவும் செய்யப்பட்டது
அரசு ஆஸ்பத்திரியில் மார்ட்டின் நிறுவன அதிகாரியின் உடல் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதனை வீடியோ பதிவும் செய்தனர்
கோவை,
கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு மற்றும் நிறுவனங்களில் கடந்த மாதம் 30-ந் தேதி வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்தநிலையில் கடந்த 3-ந் தேதி மார்ட்டின் நிறுவனத்தில் காசாளராக பணியாற்றி வந்த பழனிசாமி என்பவர் காரமடை அருகே உள்ள ஒரு குட்டையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. கடந்த 5-ந் தேதி அவரின் உடல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேதபரிசோதனை செய்யப்பட்டது. முன்னதாக பழனிசாமியின் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்ததாகவும், அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும், அவரின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பழனிசாமியின் உறவினர்கள் அவருடைய உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர்.
இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் விசாரணை அதிகாரியாக கோவை 8-வது நடுவர் நீதிமன்ற நீதிபதி ராமதாஸ் நியமிக்கப்பட்டார். நீதிபதியிடம், பழனிசாமியின் மனைவி சாந்தாமணி, மகன் ரோஹின்குமார் மற்றும் உறவினர்கள் அவரது உடலில் காயங்கள் இருப்பதாகவும், எனவே அவருடைய உடலை மறு பிரேதபரிசோதனை செய்ய வேண்டும் என்றும் மனு அளித்தனர்.
இதையடுத்து முதலில் செய்யப்பட்ட பிரேதபரிசோதனை அறிக்கையை நீதிபதி ராமதாஸ் ஆய்வு செய்தார். அந்த அறிக்கை முழுமையாகவும், திருப்தியில்லாமலும் இருப்பதால் 28-ந் தேதி மறு பிரேதபரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மறு பிரேதபரிசோதனையின்போது, ஏற்கனவே பிரேதபரிசோதனை செய்த டாக்டர்கள் குழு இல்லாத 2-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் குழுவினரை நியமிக்க வேண்டும் என்றும், சென்னை ராமச்சந்திரா மருத்துவமனை தலைமை டாக்டர் சம்பத்குமார் முன்னிலையில், மறு பிரேதபரிசோதனையின் போது வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தர விட்டார்.
இதைத்தொடர்ந்து நேற்று கோவை 8-வது நடுவர் நீதிமன்ற நீதிபதி ராமதாஸ் முன்னிலையில் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனை தலைமை மருத்துவர் சம்பத்குமார், சேலம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் கோகுல்ராம், கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரி டாக்டர் ராஜேஷ் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் மூலம் பழனிசாமியின் உடல் மறு பிரேதபரிசோதனை செய்யப்பட்டது. அத்துடன் வீடியோ பதிவும் செய்யப்பட்டது.
மறு பிரேதபரிசோதனை காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை 5 மணி நேரம் நடந்தது. தொடர்ந்து மருத்துவ குழுவினர் மற்றும் நீதிபதி ராமதாஸ் ஆகியோர் பழனிசாமி பிணமாக கிடந்த குளத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். மறு பிரேத பரிசோதனை அறிக்கையின் முடிவு வந்த பிறகே பழனிசாமி தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது தெரியவரும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். முன்னதாக பழனிசாமியின் உறவினர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து பிரேதபரிசோதனை பிரிவின் முன்பு சோகத்துடன் இருந்தனர்.
Related Tags :
Next Story