குன்னம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


குன்னம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 29 May 2019 4:30 AM IST (Updated: 29 May 2019 1:09 AM IST)
t-max-icont-min-icon

குன்னம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குன்னம்,

குன்னம் அருகே உள்ள பேரளி கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய 9 கிணறுகளும், 19 கைப்பம்புகளும் உள்ளன. கடும் வறட்சியின் காரணமாக 7 கிணறுகளில் தண்ணீர் இல்லை. 19 கைப்பம்புகளும் பழுதடைந்துள்ளது. மேலும் ஊருக்குள் இருக்கும் ஒரு கிணற்றிலும், ஊருக்கு வெளியே இருக்கும் மற்றொரு கிணற்றிலும் தண்ணீர் உள்ளது. ஊருக்கு வெளியே உள்ள கிணறு நெடுந்தூரம் என்பதால் அங்கு பொதுமக்கள் தண்ணீர் எடுப்பது இல்லை என்பதால் அப்பகுதியை சேர்ந்த சிலர் கிணற்று தண்ணீரை லாரிகளில்எடுத்து செல்வதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் ஊருக்குள் இருக்கும் கிணற்றில் மின்மோட்டார் பழுது ஏற்பட்டதால் பேரளி கிராமத்தில் கடந்த சில மாதங்களாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டு, கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. இதுகுறித்து கிராம மக்கள் பேரளி ஊராட்சிக்கு உட்பட்ட அதிகாரியிடம் புகார் தெரிவித்தும் குடிநீர் வினியோக பிரச்சினையை தீர்க்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பேரளி கிராம மக்கள் ஒன்று திரண்டு குடிநீர் கேட்டு பெரம்பலூர்- அரியலூர் சாலையில் நேற்று திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுகந்தி, குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன், வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மரியதாஸ், பேரளி கிராம நிர்வாக அலுவலர் அகிலன், வருவாய் ஆய்வாளர் சீனிவாசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் பிரச்சினையை உடனடியாக தீர்த்து வைப்பதாகவும், ஊருக்கு வெளியில் உள்ள கிணற்றில் இருந்தும் தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் பெரம்பலூர்- அரியலூர் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மரியதாஸ் பேரளி கிராமத்தில் உள்ள கிணறுகள் மற்றும் கைப்பம்புகளை ஆய்வு செய்து 2 கிணறுகளில் உள்ள பிரச்சினையை உடனடியாக சரிசெய்து குடிநீர் வினியோகம் செய்தார். மேலும் கைப்பம்புகளை ஆய்வு செய்து சில தினங்களில் பிரச்சினையை தீர்த்து வைப்பதாகவும் கூறினார். 

Next Story