நெல்லை கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை பெண்களை இழிவாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
நெல்லை கலெக்டர் அலுவலகத்தை நேற்று கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை,
நெல்லை கலெக்டர் அலுவலகத்தை நேற்று கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முற்றுகை போராட்டம்
நெல்லை அருகே உள்ள மேலச்செவல் கிராம மக்கள், பசும்பொன் முன்னணி கழக தலைவர் ஆதிசுப்பிரமணியன் தலைமையில் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். தங்கள் ஊர் பெண்களை இழிவாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், மேலச்செவல் சொக்கலிங்கபுரத்தில் உள்ள பட்டவராயன் கோவில் கொடை விழா கடந்த 24-ந்தேதி நடந்தது. இதையொட்டி புனிதநீர் எடுத்து வந்தவர்களுடன் வந்த ஒரு பிரிவினர் எங்கள் பகுதியில் வந்து அங்கிருந்த பெண்கள் முன்பு அவதூறான வார்த்தைகளை பேசியும், நடனமும் ஆடினார்கள். போலீசார் தடுத்தும் அவர்கள் நிற்கவில்லை. அப்படி நடனமாடியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை எனில் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம். மேலும் மேலச்செவல் வாணியன்குளம் அருகே மதுபோதையில் இருதரப்பினருக்கு இடையே நடந்த மோதலுக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று கூறி உள்ளனர்.
தர்ணா
கடையநல்லூர் அருகே உள்ள திருவேட்டநல்லூரை சேர்ந்த முருகன் என்பவர் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டர் கார் முன்பு தரையில் அமர்ந்தார். வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். உடனே அவரிடம் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலெக்டரிடம் மனு கொடுக்க கூறினார்கள்.
இதைத்தொடர்ந்து அவர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், நான் கலப்பு திருமணம் செய்து அதை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளேன். நான் புன்னைவனம் ஊராட்சி செயலாளர் பதவிக்கு விண்ணப்பித்து உள்ளேன். எனக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் வழங்கவேண்டும் என்று கூறி உள்ளார்.
Related Tags :
Next Story