சுசீந்திரம் அருகே கள்ளக்காதலை மனைவி கண்டித்ததால் டிரைவர் தற்கொலை


சுசீந்திரம் அருகே கள்ளக்காதலை மனைவி கண்டித்ததால் டிரைவர் தற்கொலை
x
தினத்தந்தி 29 May 2019 3:45 AM IST (Updated: 29 May 2019 1:37 AM IST)
t-max-icont-min-icon

சுசீந்திரம் அருகே கள்ளக்காதலை மனைவி கண்டித்ததால் மினி பஸ் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மேலகிருஷ்ணன்புதூர்,

சுசீந்திரம் அருகே நல்லூரை சேர்ந்தவர் ஐசக் ஜெபராஜ் (வயது 36), மினி பஸ் டிரைவர். மேலும், கட்டிட கான்டிராக்டராகவும் தொழில் செய்து வந்தார். இவருடைய மனைவி ஜோஸ்லின் ஜெமிலா. இவர்களுக்கு பெர்லின்(10) என்ற மகளும், பெர்சன்(8) என்ற மகனும் உள்ளனர்.

ஐசக் ஜெபராஜூக்கும் நாகர்கோவிலை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால், ஐசக் ஜெபராஜ் தான் சம்பாதிக்கும் பணம் முழுவதையும் அந்த பெண்ணிடம் கொடுத்து வந்தார். இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் அவருடைய மனைவிக்கு தெரிய வந்தது.

அதிர்ச்சி அடைந்த ஜோஸ்லின் ஜெமிலா கணவரை கண்டித்தார். இதனால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதற்கிடையே அந்த பெண் ஐசக் ஜெபராஜை தன்னுடன் வந்து வசிக்கும்படி கூறியதாக கூறப்படுகிறது.

தற்கொலை

இந்தநிலையில் சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ஐசக் ஜெபராஜ் வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் ஐசக் ஜெபராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரசாத் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கள்ளக்காதலை மனைவி கண்டித்ததால் மினி பஸ் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story