கலெக்டர் அலுவலகம் முன்பு, தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணுக்கு மீண்டும் ஆசிரியர் பணி
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணுக்கு மீண்டும் ஆசிரியர் பணிக்கான ஆணை வழங்கப்பட்டது.
வேலூர்,
ஆம்பூர் கஸ்பா காமராஜர் நகரை சேர்ந்த கோவிந்தன் என்பவரின் மகள் நிஸ்லா (வயது 25). இவர் கடந்த ஆண்டு ஆம்பூர் அருகே உள்ள சோமலாபுரத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்தார். பின்னர் அங்கிருந்து பேரணாம்பட்டு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அங்கு பணிக்கு செல்ல அவர் விரும்பவில்லை.
இதனால் பேரணாம்பட்டு பள்ளிக்கு அவர் சரியாக செல்லவில்லை என்று கூறப் படுகிறது. அதைத்தொடர்ந்து நிஸ்லா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் ஆசிரியர் பணி வழங்கக்கோரி வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சில மாதங்களில் பணி ஆணை வழங்குவதாக கூறினர். அதைத்தொடர்ந்து அவர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றார். ஆனால் இதுவரை அவருக்கு பணி ஆணை வழங்கவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் நிஸ்லா மீண்டும் ஆசிரியர் பணி வழங்கக்கோரி வேலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரிகள், சத்துவாச்சாரி போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட நிஸ்லாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது நாளை (நேற்று) காலை பணி ஆணை வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து அவர் அங்கிருந்து சென்றார். அதிகாரிகள் கூறியதன்படி நேற்று அவருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
அவர் ஏற்கனவே பணி புரிந்த சோமலாபுரம் அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக தற்காலிக மாற்றுப் பணிக்கான ஆணையை மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வேணுசேகரன் வழங்கினார்.
Related Tags :
Next Story