திருவெறும்பூர் அருகே எரித்து கொல்லப்பட்ட வேன் டிரைவர் உடலை வாங்க மறுத்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராட்டம்


திருவெறும்பூர் அருகே எரித்து கொல்லப்பட்ட வேன் டிரைவர் உடலை வாங்க மறுத்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராட்டம்
x
தினத்தந்தி 29 May 2019 4:30 AM IST (Updated: 29 May 2019 2:40 AM IST)
t-max-icont-min-icon

திருவெறும்பூர் அருகே எரித்து கொல்லப்பட்ட வேன் டிரைவர் உடலை வாங்க மறுத்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,

திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பாத்திபாபுரத்தை சேர்ந்தவர் அப்பாஸ்அலி(வயது34). டிரைவரான இவர், சொந்தமாக வேன் வைத்துக்கொண்டு வாடகைக்கு ஓட்டி வந்தார். மேலும் பள்ளிகளுக்கு மாணவ–மாணவிகளை வேனில் ஏற்றி சென்று விடும் வேலையும் செய்து வந்தார். நேற்று முன்தினம் அதிகாலை வேனை ஓட்டிக்கொண்டு வெளியே சென்ற அப்பாஸ் அலி பாப்பாக்குறிச்சி செல்லும் சாலையில் வேனுக்குள், உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார்.

 வாடகைக்கு வேனை சவாரிக்கு அழைத்து சென்ற நபர்கள் அப்பாஸ் அலியை மண்எண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்து விட்டு, பிணத்தை வேனுக்குள் போட்டு சென்றிருப்பது தெரியவந்தது. அவரது உடல் அருகே மண்எண்ணெய் கேன் ஒன்று எரிந்த நிலையில் கிடந்தது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.

உடலை வாங்க மறுத்து போராட்டம்


திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அப்பாஸ்அலியின் உடல் நேற்று காலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அவரது உடலை வாங்க மறுத்து திருச்சி மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மாவட்ட தலைவர் ஹஸ்ஸன் தலைமையில் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பாஸ்அலியை கொலை செய்த நபர்களை போலீசார் கைது செய்யும்வரை உடலை வாங்க மாட்டோம் என்று தெரிவித்தனர்.

மேலும் திருச்சி அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்த, ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்தனர். அவர்களை திருச்சி புத்தூர் அரசு ஆஸ்பத்திரி போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் திருவெறும்பூர் போலீசாரும் வந்தனர். போராட்டம் நடத்தியவர்களிடம், கொலையாளிகள் யார்? என கண்டறிந்து நடவடிக்கை எடுக்க தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தி வருவதாகவும், நிச்சயம் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். எஸ்.டி.பி.ஐ. கட்சியினரின் போராட்டம் காரணமாக திருச்சி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story