திருத்தணி அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


திருத்தணி அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 29 May 2019 4:15 AM IST (Updated: 29 May 2019 2:43 AM IST)
t-max-icont-min-icon

திருத்தணி அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருத்தணி,

திருத்தணி அருகில் உள்ள பூனிமாங்காடு பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் காலி குடங்களுடன் நேற்று காலை திருத்தணி- நல்லாட்டூர் சாலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘எங்கள் பகுதியில் முறையாக குடிநீர் வினியோகம் செய்வது இல்லை. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. குடிநீர் கிடைக்காததால் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளோம். தினமும் 2 கி.மீ. தூரம் நடந்து சென்று தண்ணீர் கொண்டு வருகிறோம்’ என்று தெரிவித்தனர்.

இதனை அறிந்த திருத்தணி தாசில்தார் செங்கலா, திருவாலங்காடு வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் மற்றும் கனகம்மாசத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகளும், போலீசாரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது குடிநீர் முறையாக வழங்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும், முதல் கட்டமாக டிராக்டர் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும், மேலும், புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் அனைவரும் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story