திருச்சியில் இருந்து துணை ராணுவ படையினர் ரெயிலில் சொந்த ஊர் புறப்பட்டு சென்றனர்


திருச்சியில் இருந்து துணை ராணுவ படையினர் ரெயிலில் சொந்த ஊர் புறப்பட்டு சென்றனர்
x
தினத்தந்தி 28 May 2019 11:00 PM GMT (Updated: 28 May 2019 9:14 PM GMT)

திருச்சியில் இருந்து துணை ராணுவ படையினர் ரெயிலில் சொந்த ஊர் புறப்பட்டு சென்றனர். அவர்களை போலீசார் வழியனுப்பி வைத்தனர்.

திருச்சி,

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 18–ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. இதையொட்டி பாதுகாப்பு பணிக்காக வெளிமாநிலங்களில் இருந்து துணை ராணுவ படையினர் வரவழைக்கப்பட்டிருந்தனர். தேர்தல் முடிந்த பின் பெரும்பாலான துணை ராணுவ படையினர் அவர்களது சொந்த ஊர் புறப்பட்டு சென்றனர்.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் மட்டும் குறிப்பிட்ட சில கம்பெனிகளை சேர்ந்த துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கடந்த 23–ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தது.

இதைதொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பில் ஈடுபட்ட துணை ராணுவ படையினர் அவர்களது சொந்த ஊர் புறப்பட்டு செல்ல தொடங்கினர். அதன்படி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 85 பேர் அவர்களது சொந்த ஊர் புறப்பட்டு செல்ல ராமநாதபுரத்தில் இருந்து போலீஸ் பஸ், வேன்களில் திருச்சி வந்தனர்.


திருச்சி ஜங்‌ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று மாலை 4 மணிக்கு ஹவுரா புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்ய 2 பெட்டிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. துணை ராணுவ படையினர் தங்களது துப்பாக்கிகள் மற்றும் பாதுகாப்பு கவசங்கள், தாங்கள் கொண்டு வந்த உடைமைகள் ஆகியவற்றை அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பெட்டியில் வைத்தனர்.

முதலாவது நடைமேடையில் துணை ராணுவ படையினர் அணிவகுத்து நின்ற போது அவர்களுக்கு உயர் அதிகாரி ஒருவர் அறிவுரை வழங்கினார். அதன்பின் அனைவரும் ரெயிலில் ஏறி பயணம் செய்தனர். அவர்களை போலீசார் வழியனுப்பி வைத்தனர்.

Next Story