அணைகளுக்கு நீர்வரத்து இருக்கும்போது தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதில் பிரச்சினை இல்லை டி.கே.சிவக்குமார் பேட்டி


அணைகளுக்கு நீர்வரத்து இருக்கும்போது தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதில் பிரச்சினை இல்லை டி.கே.சிவக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 29 May 2019 4:00 AM IST (Updated: 29 May 2019 3:03 AM IST)
t-max-icont-min-icon

அணைகளுக்கு நீர்வரத்து இருக்கும்போது, தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதில் பிரச்சினை இல்லை என்று நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.

பெங்களூரு, 

அணைகளுக்கு நீர்வரத்து இருக்கும்போது, தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதில் பிரச்சினை இல்லை என்று நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.

தண்ணீர் திறப்பதில்...

காவிரி மேலாண்மை ஆணையம், கர்நாடகம் காவிரியில் 9.19 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீரை தமிழகத்திற்கு திறக்க வேண்டும் என்று நேற்று உத்தரவிட்டது. இதுகுறித்து கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு குறித்து நாங்கள் விவாதித்தோம். அந்த ஆணையத்தின் உத்தரவை நாங்கள் மதிக்கிறோம். அணைகளுக்கு நீர்வரத்து இருக்கும்போது, தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை.

குரல் எழுப்புவார்கள்

அணைகளுக்கு நீர்வரத்து குறித்து ஆய்வு செய்து முடிவு எடுப்போம். ஒருவேளை நீர் இல்லாத நிலை ஏற்பட்டால், அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி விவாதித்து முடிவு எடுப்போம்.

கர்நாடகத்தின் நலனையும், கோர்ட்டின் உத்தரவையும் காப்போம். கர்நாடகத்தில் பா.ஜனதா அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. தண்ணீர் பிரச்சினை குறித்து அவர்கள் குரல் எழுப்புவார்கள். இந்த பிரச்சினையை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

10 எம்.பி.க்கள்

முன்னதாக மந்திரி டி.கே.சிவக்குமார் குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அவர் நேற்று பெங்களூரு திரும்பிய உடன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

எங்கள் கட்சிக்கு கர்நாடகத்தில் 10 எம்.பி.க்கள் இருந்தனர். இதில் 9 பேர் தோல்வி அடைந்துள்ளனர். தேவேகவுடா, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் தோல்வி அடைந்ததை என்னால் நம்ப முடியவில்லை. அவர்களின் போராட்டத்திற்கு வரலாறே உள்ளது.

மகிழ்ச்சி அடையவில்லை

எனது சகோதரர் டி.கே.சுரேஷ் வெற்றி பெற்றுள்ளதை கண்டு மகிழ்ச்சி அடையவில்லை. ஆனால் தேவேகவுடா, மல்லிகார்ஜுன கார்கே தோல்வி அடைந்தது வருத்தம் அளிக்கிறது. இதை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. தேர்தல் தோல்வி நாங்கள் எதிர்பார்க்காதது.

சில விஷயங்கள் குறித்து பேசக்கூடாது என்று எங்கள் கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது. கூட்டணி அரசுக்கு ஆதரவு அளிப்பதாக நாங்கள் வாக்குறுதி அளித்துள்ளோம். அதன்படி நாங்கள் நடந்துகொள்வோம்.

வேலை வாய்ப்புகள்

சட்டசபையை கலைக்க வேண்டும் என்று எடியூரப்பா சொல்கிறார். அவரது கையில் எல்லா அதிகாரமும் உள்ளது. அதை அவர் செய்யட்டும். ஜிந்தால் நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்க அரசு முடிவு செய்துள்ளது. இது சரியான முடிவு தான்.

அந்த நிறுவனம் வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது. மின் உற்பத்தியை அதிகரித்துள்ளது. முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Next Story