மாவல் நாடாளுமன்ற தொகுதியில் ‘மகன் பர்த் பவார் தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்கிறேன்’ அஜித் பவார் பேட்டி


மாவல் நாடாளுமன்ற தொகுதியில் ‘மகன் பர்த் பவார் தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்கிறேன்’ அஜித் பவார் பேட்டி
x
தினத்தந்தி 29 May 2019 4:30 AM IST (Updated: 29 May 2019 4:00 AM IST)
t-max-icont-min-icon

மாவல் நாடாளுமன்ற தொகுதியில் தனது மகன் தோல்வி அடைந்ததற்கு தான் பொறுப்பேற்றுக்கொள்வதாக அஜித் பவார் கூறினார்.

மும்பை, 

மாவல் நாடாளுமன்ற தொகுதியில் தனது மகன் தோல்வி அடைந்ததற்கு தான் பொறுப்பேற்றுக்கொள்வதாக அஜித் பவார் கூறினார்.

எதிர்க்கட்சிகள் கூட்டம்

மராட்டியத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா- சிவசேனா கட்சிகள் அமோக வெற்றி பெற்றது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தோல்வியை சந்தித்தன.

மாவல் நாடாளுமன்ற தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவன தலைவரின் பேரனும், முன்னாள் துணை முதல்-மந்திரி அஜித் பவாரின் மகனுமான பர்த் பவார் தனது முதல் தேர்தலை சந்தித்தார். ஆனால் அவரை எதிர்த்து போட்டியிட்ட சிவசேனா வேட்பாளர் ஸ்ரீரங் பார்னேவிடம் 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் கடும் தோல்வியை சந்தித்தார்.

இந்தநிலையில் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்க நேற்று நடந்த மராட்டிய எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் அஜித்பவார் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், சுவாபிமானி சேத்காரி சங்கதானா, சாமஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொண்டன.

கூட்டத்திற்கு பிறகு அஜித்பவாரிடம் நிருபர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-

மக்கள் முடிவு

மக்கள் தங்கள் மனதில் பிரதமர் மோடியை மற்றொரு முறை பிரதமராக பார்ப்பது என முடிவு செய்துவிட்டனர். மக்களின் தீர்ப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். பர்த் பவாரின் தோல்விக்கு நான் முழு பொறுப்பு ஏற்றுக்கொள்கிறேன்.

எதிர்க்கட்சிகள் தற்போது தோல்வியில் இருந்து மீண்டு மராட்டிய சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்கான நடவடிக்கையில் இறங்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மராட்டியத்தில் நிலவும் வறட்சி பிரச்சினை குறித்து வரும் புதன் அல்லது வியாழக்கிழமை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை சந்தித்து, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் எடுத்துரைப்பார் எனவும் அஜித்பவார் தெரிவித்தார்.

Next Story