புனே அருகே மலைப்பாதையில் அந்தரத்தில் தொங்கிய பஸ் 56 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்


புனே அருகே மலைப்பாதையில் அந்தரத்தில் தொங்கிய பஸ் 56 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்
x
தினத்தந்தி 29 May 2019 4:30 AM IST (Updated: 29 May 2019 4:09 AM IST)
t-max-icont-min-icon

புனே அருகே மலைப்பாதையில் சென்ற பஸ் தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு அந்தரத்தில் தொங்கியது.

மும்பை, 

புனே அருகே மலைப்பாதையில் சென்ற பஸ் தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு அந்தரத்தில் தொங்கியது. கீழே இருந்த பள்ளத்தாக்கில் விழாததால் பஸ்சில் இருந்த 56 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

சொகுசு பஸ்

மும்பையில் இருந்து நேற்று புனே நோக்கி சொகுசு பஸ் ஒன்று சென்றது. அந்த பஸ்சில் 56 பயணிகள் இருந்தனர். புனே அருகே போர்காட் என்ற மலைப்பகுதியில் சிறிது நேரம் பஸ் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் அந்த பஸ்சை மெயின் சாலைக்கு கொண்டு செல்வதற்காக டிரைவர் பின்பக்கமாக எடுத்தார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக வேகமாக பின் நோக்கி நகர்ந்த பஸ், அங்குள்ள சாலை தடுப்புச்சுவரை உடைத்து தள்ளியது. மேலும் அந்த பஸ் பயணிகளுடன் அந்தரத்தில் தொங்கிக்கொண்டு இருந்தது.

பயணிகள் உயிர் தப்பினர்

கீழே பெரிய பள்ளத்தாக்கு என்பதால் அதிர்ச்சியில் உறைந்த பயணிகள் உதவிகேட்டு கூச்சல் போட்டனர். அவர்கள் பதறி அடித்துக்கொண்டு முன்பக்க வாசல் வழியாக வெளியே குதித்து உயிர் தப்பினார்கள். அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதுபற்றி போலீஸ் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனே அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

கிரேன் மூலம் அந்த பஸ் பள்ளதாக்கில் விழாமல் மீட்கப்பட்டது. தடுப்புச்சுவரை உடைத்து கொண்டு பாய்ந்த பஸ் அதிர்ஷ்டவசமாக பள்ளத்தாக்கில் விழவில்லை. இல்லையெனில் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும் என அந்த பஸ்சில் இருந்த பயணி ஒருவர் தெரிவித்தார்.

Next Story