அரியாங்குப்பம் அருகே, குடிசை வீடு தீயில் எரிந்து நாசம்


அரியாங்குப்பம் அருகே, குடிசை வீடு தீயில் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 28 May 2019 10:00 PM GMT (Updated: 28 May 2019 11:01 PM GMT)

அரியாங்குப்பம் அருகே தீவிபத்தில் குடிசை வீடு எரிந்து நாசமானது.

அரியாங்குப்பம், 

அரியாங்குப்பம் அருகே மணவெளி கலைஞர் நகர் 3-வது குறுக்குத்தெருவைச் சேர்ந்தவர் அபிராமி (வயது 65). நேற்று மாலை இவர் தன்னுடைய குடிசை வீட்டை பூட்டிவிட்டு, அதே பகுதியில் உள்ள மகன் வீட்டுக்கு சென்றிருந்தார். இந்த நிலையில் பூட்டியிருந்த அபிராமியின் குடிசை வீட்டில் திடீரென தீப்பிடித்துக்கொண்டது. சிறிது நேரத்தில் தீ “மள மள”வென குடிசை முழுவதும் பரவி கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

அதுபற்றி தகவல் அறிந்ததும் அபிராமி அலறியடித்துக்கொண்டு ஓடி வந்தார். இந்த தீ விபத்து குறித்து புதுச்சேரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மேலும் அக்கம்பக்கத்தினரும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் புதுச்சேரி தீயணைப்பு நிலையத்தினரும் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 30 நிமிடம் போராடி தீ அணைக்கப்பட்டது. அதற்குள் குடிசை வீட்டுக்குள் இருந்த டி.வி., அலமாரி, துணிமணிகள் உள்ளிட்ட பொருட்கள் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது.

இந்த தீவிபத்து குறித்து அரியாங்குப்பம் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் குடிசையில் தீப்பிடித்துக் கொண்டதா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Next Story