நாகர்கோவில் மூவேந்தர்நகரில் மின் கம்பம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு


நாகர்கோவில் மூவேந்தர்நகரில் மின் கம்பம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 30 May 2019 4:30 AM IST (Updated: 29 May 2019 8:25 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் மூவேந்தர்நகரில் மின் கம்பம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில்,

நாகர்கோவில் மூவேந்தர் நகரில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு செல்லும் பாதையில் மின் கம்பம் அமைப்பதற்கான பணி கடந்த சில தினங்களுக்கு முன் நடந்தது. ஆனால் அதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கோவிலுக்கு சொந்தமான இடத்தில் மின் கம்பம் அமைக்க கூடாது என்று வலியுறுத்தினார்கள். இதனால் பணிகள் நிறுத்தப்பட்டன. மின் வாரிய ஊழியர்களும் திரும்பி சென்றனர்.

இந்த நிலையில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் மின் கம்பம் நடும் முயற்சி நேற்று காலை மீண்டும் நடந்தது. இதற்காக மின் வாரிய ஊழியர்கள் நிறைய பேர் வந்திருந்தனர். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். பின்னர் மின் கம்பம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள். எனினும் மின் கம்பம் அமைக்கும் பணி கைவிடப்படவில்லை. இதைத் தொடர்ந்து மூவேந்தர் நகர் பிரதான சாலையில் இருந்து முத்தாரம்மன் கோவிலுக்கு செல்லும் பாதையை பொதுமக்கள் மறைத்து நாற்காலிகளை போட்டு தர்ணா போராட்டத்தை தொடங்கினர்.

மேலும் கஞ்சி காய்ச்சும் போராட்டமும் நடத்தப்பட்டதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து ஆசாரிபள்ளம் போலீசார் அங்கு விரைந்து வந்து பொதுமக்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை. மின் கம்பம் அமைக்க கூடாது என்பதில் பொதுமக்கள் உறுதியாக இருந்தனர். இதனால் தர்ணா போராட்டம் தொடர்ந்தது. போராட்டத்தில் ஏதேனும் அசம்பாவித சம்பவம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அதிரடி படை போலீசார் குவிக்கப்பட்டனர்.

தர்ணா போராட்டம் பற்றி பொதுமக்களிடம் கேட்டபோது, “மூவேந்தர் நகரில் முத்தாரம்மன் கோவிலுக்கு செல்லும் பாதையில் மின் கம்பம் தனிப்பட்ட ஒரு நபருக்காக அமைக்கப்படுகிறது. கோவில் திருவிழாவின் போது சம்பந்தப்பட்ட பாதையில் தான் பொங்கல் வழிபாடு நடைபெறும். அப்படி இருக்க அங்கு மின் கம்பம் அமைத்தால் பெரும் இடையூறு ஏற்படும். எனவே மின் கம்பம் அமைக்கும் முயற்சியை கை விட வேண்டும்’’ என்றனர். 

இதைத் தொடர்ந்து ஊர் நிர்வாகிகள் சிலரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story