ஊட்டியில், தனியார் பள்ளி வாகனங்களில் கலெக்டர் ஆய்வு - 11 பஸ்களில் குறைபாடுகள் கண்டுபிடிப்பு
ஊட்டியில் தனியார் பள்ளி வாகனங்களில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார். 11 பஸ்களில் குறைபாடுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
ஊட்டி,
தனியார் பள்ளி வாகனங்களில் மாணவ- மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த 18 வகையான பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, பள்ளி வாகனம் முழுவதும் மஞ்சள் நிற வர்ணம் பூசப்பட்டு இருக்க வேண்டும். முன்புறம் மற்றும் பின்புறத்தில் பள்ளி பேருந்து எனவும், பக்கவாட்டில் பள்ளியின் முழு பெயர் மற்றும் முகவரியுடன் தொலைபேசி எண் எழுதப்பட்டு இருக்க வேண்டும்.
நுழைவு மற்றும் வெளியேறும் வழி கைபிடியுடன் இருக்க வேண்டும். புத்தகப்பை வைக்க ஏதுவாக பள்ளி வாகனத்தின் இருக்கையின் அடிப்பகுதியில் ரேக்குகள் அமைக்கப்பட்டு இருக்க வேண்டும். அவசரகால வழி என உள்புறம், வெளிப்புறமும் சிவப்பு நிறத்தில் எழுதிருக்க வேண்டும். வாகனத்தில் முதலுதவி பெட்டி வைத்திருக்க வேண்டும்.
ஒவ்வொரு பள்ளி வாகனத்திலும் 2 கிலோ கொண்ட 2 தீயணைப்பு கருவிகள் வைத்திருக்க வேண்டும். வாகனத்தில் உதவியாளர் குழந்தைகள் பாதுகாப்பாக வாகனத்தில் இருந்து இறங்கும் போதும், ஏறும் போது உதவி செய்ய வேண்டும். குறைந்தபட்சம் ஓட்டுனர் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்று இருக்க வேண்டும் போன்றவை அரசாணையில் இடம் பெற்று இருக்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 341 பள்ளி வாகனங்கள் உள்ளன. இந்த வாகனங்கள் ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்ட வட்டார போக்குவரத்துத்துறை சார்பில், இந்த ஆண்டுக்கான ஆய்வு ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதையொட்டி தனியார் பள்ளி வாகனங்கள் அங்கு கொண்டு வரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டன. இந்த வாகனங்களில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு மேற்கொண்டார். அப்போது முதலுதவி பெட்டியில் மருந்துகள் சரியாக உள்ளதா, காலாவதியாக இருக்கிறதா, அவசரகால வழி திறந்து ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால், பள்ளி வாகனங்கள் அனைத்திலும் 35 கிலோ மீட்டர் வேகத்துக்குள் செல்லும் அளவிற்கு வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டு உள்ளதா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசும்போது, தனியார் பள்ளி வாகன ஓட்டுனர்கள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்து வாகனங்களை இயக்க வேண்டும். பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு உங்களிடம் தான் இருக்கிறது. எனவே, பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும் என்றார்.
ஆய்வில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா, வட்டார போக்குவரத்து அலுவலர் கதிரவன், ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் குலோத்துங்கா, விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நேற்று 190 தனியார் பஸ்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 11 பஸ்களில் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. அந்த பஸ்களின் உரிமையாளர்களுக்கு குறைபாடுகளை சரிசெய்து மறுஆய்வுக்கு கொண்டு வரக்கோரி நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story