ஆபாச படங்களை பதிவிடுவதாக மிரட்டல், பிரபல பாடகர் பெயரில் போலி முகநூல் தொடங்கி இளம் பெண்களிடம் பணம் பறித்தவர் கைது


ஆபாச படங்களை பதிவிடுவதாக மிரட்டல், பிரபல பாடகர் பெயரில் போலி முகநூல் தொடங்கி இளம் பெண்களிடம் பணம் பறித்தவர் கைது
x
தினத்தந்தி 30 May 2019 4:30 AM IST (Updated: 30 May 2019 12:56 AM IST)
t-max-icont-min-icon

பிரபல பாடகர் பெயரில் போலி முகநூல் தொடங்கி, இளம்பெண்களின் படங்களை ஆபாசமாக பதிவிடுவதாக மிரட்டி பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார். இந்த மோசடி குறித்து கோவை மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது:-

கோவை,

உளுந்தூர் பேட்டையை சேர்ந்தவர் மகேந்திரவர்மன்(வயது 30). பி.எட். படித்துள்ளார். இவர் நூதன முறையில் இளம்பெண்களிடம் மோசடி செய்து பணம் சம்பாதிக்க திட்டமிட்டார். பிரபல இந்தி பின்னணி பாடகர் அர்மான் மாலிக் பெயரில் போலி முகநூல் தொடங்கினார். அர்மான் மாலிக்கின் இசை ஆல்பங்கள் மற்றும் அவரது அழகிய புகைப்படங்களையும் போலி முகநூல் பக்கத்தில் பதிவு செய்தார். அதன்பின்னர் இளம்பெண்களுக்கு முகநூல் நண்பராக பழக வருமாறு அழைப்பு விடுத்தார். இந்த முகநூலை பார்த்த இளம்பெண்கள் பலர், அர்மான் மாலிக் தான் அழைப்பு விடுப்பதாக கருதி, முகநூல் நண்பர்களானார்கள். பின்னர் அந்த இளம்பெண்களின் செல்போன் எண்களை பெற்று வாட்ஸ்-அப் மூலமும் பழக தொடங்கினார்.

சில இளம்பெண்களிடம் காதலுடன் பேசி மயக்கினார்.பின்னர் அவர்களது அந்தரங்க படங்களை அனுப்புமாறும் கூறினார். இதனை நம்பிய இளம்பெண்கள் தங்கள் தொடர்பான படங்களை அனுப்பினார்கள். அதன் பின்னர்தான் மகேந்திரவர்மன் மோசடியில் ஈடுபட தொடங்கினார். இந்த படங்களை மார்பிங் செய்து, ஆபாச படமாக சித்தரித்து முகநூல் பக்கத்தில் பதிவிடப்போவதாகவும், இதனை தவிர்க்க வேண்டுமானால் குறிப்பிட்ட தொகையை தனக்கு தர வேண்டும் என்றும் மிரட்ட தொடங்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண்கள் பலர், மகேந்திரவர்மன் கேட்ட தொகையை அவர் அனுப்பிய வங்கி கணக்கிற்கு செலுத்தினர்.

இதுபோன்று 15-க்கும் மேலான பெண்களிடம் ரூ.50 லட்சத்துக்கும் மேல் மகேந்திர வர்மன் பறித்ததாக தெரிகிறது. இந்தநிலையில் பாதிக்கப்பட்ட கோவையை சேர்ந்த ஒரு இளம்பெண், இதுகுறித்து கோவை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் யமுனா, சப்-இன்ஸ்பெக்டர் அருண் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இதனை தொடர்ந்து இளம்பெண், மகேந்திரவர்மனிடம் பேச போலீசார் ஏற்பாடு செய்தனர். குறிப்பிட்ட இடத்துக்கு வந்தால் பணம் தருவதாக கூறியதை தொடர்ந்து நேற்று மகேந்திரவர்மன் கோவைக்கு வந்தபோது, மறைந்து இருந்த போலீசார் அவரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

அவரிடம் இருந்து செல்போன்கள் மற்றும் கையடக்க கணினி(டேப்) ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் அவருடன் தொடர்பு வைத்து இருந்த இளம்பெண்களின் விவரங்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த 1½ ஆண்டாக இதுபோன்ற மோசடியில் அவர் ஈடுபட்டு வந்ததாக போலீசிடம் தெரிவித்துள்ளார்.

கைதான மகேந்திர வர்மன் மீது தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு மற்றும் கொலை மிரட்டல், பெண்களை களங்கப்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நேற்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story