தூத்துக்குடியில் பரபரப்பு: வெளிநாட்டுக்கு கடத்த பதுக்கிய ரூ.10 லட்சம் கடல் அட்டை பறிமுதல்


தூத்துக்குடியில் பரபரப்பு: வெளிநாட்டுக்கு கடத்த பதுக்கிய ரூ.10 லட்சம் கடல் அட்டை பறிமுதல்
x
தினத்தந்தி 30 May 2019 12:59 AM IST (Updated: 30 May 2019 12:59 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் வெளிநாட்டுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

தூத்துக்குடி, 

கடல்வாழ் உயிரினங்களில் அழிந்து வரும் உயிரினங்களை பாதுகாப்பதற்காக அரசு மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடல் அட்டை உள்ளிட்ட உயிரினங்களை பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனை மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

ஆனாலும், கடல் அட்டை கடத்தல் தொடர்ந்து வருகிறது. இந்த கடல் அட்டை வெளிநாடுகளில் பல்வேறு மருந்து பொருட்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் இருந்து சட்டவிரோதமாக பிடிக்கப்படு்ம் கடல் அட்டைகள் தொடர்ச்சியாக வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு குடோனில் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கடலோர பாதுகாப்பு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன், சப்-இன்ஸ்பெக்டர் ஜானகிராமன், நுண்ணறிவு பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் நேற்று அந்த குடோனுக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது, அந்த குடோனில் 11 பிளாஸ்டிக் டப்பாக்களில் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன.

அந்த கடல் அட்டைகளை பதப்படுத்துவதற்காக, அவிக்கும் பணியில் லூர்தம்மாள்புரத்தை சேர்ந்த மீராசா (வயது 40), மாதவன்நாயர் காலனியை சேர்ந்த அந்தோணிராஜ் (41) ஆகியோர் ஈடுபட்டு இருந்தனர்.

உடனடியாக போலீசார் அங்கு இருந்த 1,000 கிலோ எடை கொண்ட கடல் அட்டைகள், ஒரு மோட்டார் சைக்கிள், அடுப்பு, சிலிண்டர்கள், பாத்திரங்களை பறிமுதல் செய்தனர். இந்த கடல் அட்டைகளின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

அவற்றை பதுக்கி வைத்து இருந்ததாக மீராசா, அந்தோணிராஜ் ஆகிய 2 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், லட்சத்தீவு பகுதியில் இருந்து கடல் அட்டைகளை கொண்டு வந்து தூத்துக்குடியில் வைத்து பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு கடத்த தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தது தெரியவந்தது.

தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டை மற்றும் பிடிபட்டவர்களை போலீசார் மன்னார்வளைகுடா உயிர்க்கோள காப்பக வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறை அதிகாரிகள் அந்த 2 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story