நெல்லை அருகே ரெயில் பெட்டி விபத்து மீட்பு ஒத்திகை


நெல்லை அருகே ரெயில் பெட்டி விபத்து மீட்பு ஒத்திகை
x
தினத்தந்தி 30 May 2019 3:30 AM IST (Updated: 30 May 2019 1:16 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே ரெயில் பெட்டி விபத்து மீட்பு ஒத்திகை நடந்தது.

நெல்லை,

ரெயில் பெட்டி கவிழ்ந்து விபத்து நேரிட்டால், எவ்வாறு மீட்பு பணிகளில் ஈடுபடுவது?, அதில் உள்ள பயணிகளை பாதுகாப்பான முறையில் எவ்வாறு மீட்பது? என்பது குறித்து செயல்விளக்கம் அளிக்கும் வகையில், மீட்பு ஒத்திகை நடத்த வேண்டும் என்று தெற்கு ரெயில்வே உத்தரவிட்டு உள்ளது. அதன்படி ரெயில்வே கோட்டம் வாரியாக, விபத்து மீட்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது.

மதுரை ரெயில்வே கோட்டம் சார்பில், நெல்லை அருகே உள்ள தாழையூத்து ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டி விபத்து மீட்பு ஒத்திகை நேற்று காலையில் நடந்தது. இதையடுத்து அங்கு ஒரு ரெயில் பெட்டி விபத்தில் கவிழ்வது போன்று கவிழ்த்து வைக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து அங்கு ரெயில் பெட்டி கவிழ்ந்ததாக, தாழையூத்து ரெயில் நிலைய கண்காணிப்பாளர் மாலை சுப்பிரமணியன், மதுரை ரெயில்வே கோட்ட அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தார்.

தொடர்ந்து ரெயில்வே அதிகாரிகள், அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ரெயில்வே ஊழியர்கள் தாழையூத்து ரெயில் நிலையத்துக்கு விரைந்து சென்று, மீட்பு பணிகளை தொடங்கினர். கவிழ்ந்த ரெயில் பெட்டியில் வெல்டிங் எந்திரம் மூலம் துளையிட்டு, அதன் வழியாக ரெயில்வே ஊழியர்கள் நுழைந்து, விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்பது போன்று தத்ரூபமாக செய்து காட்டினர்.

தொடர்ந்து விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது போன்றும், பின்னர் அவர்களை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வது போன்றும் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதற்காக அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மருத்துவ குழுவினரும் வரவழைக்கப்பட்டனர்.

தொடர்ந்து ஏ.ஆர்.டி. எனப்படும் விபத்து மீட்பு ரெயிலும் வரவழைக்கப்பட்டது. பின்னர் அதில் உள்ள எந்திரங்கள் மூலம், கவிழ்ந்த ரெயில் பெட்டியை தூக்கி தண்டவாளத்தில் நிறுத்தினர். காலை 9.30 மணி அளவில் தொடங்கிய மீட்பு ஒத்திகை சுமார் 2 மணி நேரத்தில் நிறைவு அடைந்தது. இந்த மீட்பு ஒத்திகை, மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் லெனின் முன்னிலையில் நடந்தது.

இதுகுறித்து ரெயில்வே மேலாளர் லெனின் கூறுகையில், ரெயில் பெட்டி விபத்து மீட்பு ஒத்திகையில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 35 பேர் உள்ளிட்ட 150 பேர் ஈடுபட்டனர். இதன் மூலம் ரெயில் பெட்டி கவிழ்ந்து விபத்து நேரிட்டால் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள், பணிகள் குறித்து விளக்கி கூறப்பட்டது என்றார்.

கூடுதல் ரெயில்வே கோட்ட மேலாளர் ஷாங், முதன்மை மருத்துவ கண்காணிப்பாளர் சாகு, கோட்ட பாதுகாப்பு அதிகாரி மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story