குற்றாலத்தில் சிற்றாறு தூய்மைப்படுத்தும் பணி
குற்றாலத்தில் சிற்றாறு தூய்மைப்படுத்தும் பணியை மாவட்ட கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்.
தென்காசி,
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் தொடங்கும் சிற்றாறு, சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றில் சங்கமிக்கிறது. சுமார் 86 கிலோ மீட்டர் நீளம் உள்ள சிற்றாறு ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியதால், சீவலப்பேரி வரையிலும் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
சிற்றாறு மூலம் 150 குளங்கள் நேரடியாக பாசன வசதி பெறுகின்றன. சிற்றாறின் குறுக்கே புலியூர் அணை, பாவூர் அணை, மாறாந்தை அணை, மானூர் அணை, பள்ளிக்கோட்டை அணை, உக்கிரன்கோட்டை அணை உள்ளிட்ட 17 தடுப்பணைகள் உள்ளன.
எனவே சிற்றாறை தூய்மைப்படுத்தி தூர்வார வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பாவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
இதையடுத்து சிற்றாறை தூய்மைப்படுத்த ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் அறிக்கையின்படி, நெல்லை மாவட்ட நிர்வாகம், நம்ம தாமிரபரணி தொண்டு நிறுவனம், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவை சார்பில், சிற்றாறை தூய்மைப்படுத்தும் பணி குற்றாலத்தில் நேற்று தொடங்கியது.
நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா கொடியசைத்து, சிற்றாறை தூய்மைப்படுத்தும் பணியை தொடங்கி வைத்தார். பொக்லைன் எந்திரம் மூலம் சிற்றாறில் உள்ள அமலைச்செடிகளை அகற்றினர். முதற்கட்டமாக சிற்றாறில் 5 கிலோ மீட்டர் தூரமும், பின்னர் 12 கிலோ மீட்டர் தூரமும் தூய்மைப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
தென்காசி உதவி கலெக்டர் சவுந்தர்ராஜ், தாசில்தார் சண்முகம், அண்ணா பல்கலைக்கழக ஊரக வளர்ச்சி ஒருங்கிணைப்பாளர் சக்திநாதன், பொதுப்பணித்துறை சிற்றாறு பிரிவு நிர்வாக பொறியாளர் ஜெயபாலன், உதவி பொறியாளர் ஜெய்லானி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story