சேலம் செவ்வாய்பேட்டையில் மேம்பால பணிக்காக 22 கடைகள் இடித்து அகற்றம்


சேலம் செவ்வாய்பேட்டையில் மேம்பால பணிக்காக 22 கடைகள் இடித்து அகற்றம்
x
தினத்தந்தி 30 May 2019 4:15 AM IST (Updated: 30 May 2019 2:00 AM IST)
t-max-icont-min-icon

சேலம் செவ்வாய்பேட்டையில் மேம்பால பணிக்காக 22 கடைகள் இடித்து அகற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சேலம்,

சேலம் செவ்வாய்பேட்டையில் இருந்து லீ பஜார் செல்லும் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரெயில்வே மேம்பால கட்டும் பணிகள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. இந்த மேம்பாலத்தின் மூலம் லீ பஜார், செவ்வாய்பேட்டை பகுதிகளுக்கு லாரிகளில் எளிதாக சரக்குகளை கொண்டு செல்ல முடியும். மாநகருக்குள் போக்குவரத்து நெரிசல் இருக்காது. செவ்வாய்பேட்டை, லீ பஜாரில் பொருட்களை இறக்கிவிட்டு 3 ரோடு வழியாக திருவாக்கவுண்டனூர் பைபாஸ் பகுதிக்கு வாகனங்கள் சென்றுவிட முடியும்.

இந்த மேம்பாலம் பணிகள் லீ பஜார் பகுதியில் முடிவடைந்தநிலையில், செவ்வாய்பேட்டை சந்தைப்பேட்டை பகுதியில் பாலம் கீழே இறங்கும் பகுதியில் உள்ள இடத்திற்கு சொந்தக்காரர்கள் தங்களுக்கு இழப்பீடு போதுமானதாக இல்லை என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனால் மேம்பாலம் கட்டுமான பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

இந்தநிலையில், இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, இழப்பீடு தொகையை கோர்ட்டில் செலுத்துமாறு கூறியதுடன், ஒரு மாத அவகாசத்துடன் இடத்தை காலி செய்யுமாறு சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் 22 கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வைத்து கடைகளை காலி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று காலை கடைகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர். அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். பின்னர் சேலம் உதவி கலெக்டர் செழியன் மற்றும் வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் ஒவ்வொரு கடையாக இடித்து அகற்றும் பணி நடந்தது.

அப்போது, அங்கு திரண்டிருந்த கடை உரிமையாளர்கள் ஒரு சதுரடி நிலம் இந்த பகுதியில் ரூ.30 ஆயிரம் மதிப்பில் இருக்கும்போது, வெறும் ரூ.3 ஆயிரம் மட்டுமே இழப்பீடு தர அரசு முடிவு செய்துள்ளது.

எனவே, கூடுதல் இழப்பீடு தர வேண்டும், மேலும் கால அவகாசம் நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனால் அதிகாரிகளுக்கும், கடை உரிமையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு அவர்களை போலீசார் சமரசப்படுத்தினர். இதையடுத்து மேம்பாலம் கட்டுவதற்கு தேவையான இடத்தில் இருந்த 22 கடைகள் இடித்து அகற்றப்பட்டன.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கோர்ட்டு உத்தரவுப்படி மேம்பாலம் கட்டுவதற்கு இடையூறாக உள்ள 22 கடைகள் இடித்து அகற்றப்பட்டன. செவ்வாய்பேட்டை-லீ பஜார் மேம்பாலம் பணிகள் 85 சதவீதம் முடிந்துவிட்டது.

விரைவில் மீதமுள்ள பணிகள் முடிவடைந்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். அதன்பிறகு போக்குவரத்து நெரிசல் இருக்காது, என்றார்.


Next Story