வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.3 லட்சம் போதை பொருட்கள் பறிமுதல்
காரைக்காலில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான போதை பொருட்களை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
காரைக்கால்,
காரைக்காலில் நாகை நெடுஞ்சாலையில் ஹைவே நகர் உள்ளது. இங்குள்ள ஒரு வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக, உணவு கலப்பட தடுப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், நகராட்சி ஆணையர் சுபாஷ், உணவு கலப்பட தடுப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரி ரவிச்சந்திரன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் ஊழியர்கள் குறிப்பிட்ட அந்த வீட்டிற்கு நேற்று திடீரென்று சென்று அதிரடி சோதனை செய்தனர். அப்போது வீட்டின் வாசல், படுக்கை அறை, கழிவறையில் மூட்டை, மூட்டையாக போதை பொருள் (கூல் லிப், ஹான்ஸ், பிளாக் சிகரெட்) பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.
இது தொடர்பாக அந்த வீட்டில் இருந்தவரிடம் அதிகாரிகள் விசாரித்தனர். விசாரணையில் சிங்காரவேலு என்பவருக்கு சொந்தமான வீட்டை நிரவி பகுதியை சேர்ந்த சாமிக்கண்ணு மகன் ரவி (வயது 47) என்பவர் வாடகைக்கு எடுத்து மனைவி, மகள், மாமியார் என குடும்பத்தோடு வசித்து வருவது தெரியவந்தது.
திருச்சியில் இருந்து வரவழைக்கப்பட்ட போதை பொருட்களை, காரைக்கால், நாகூர், நாகப்பட்டினம், பொறையாறு, மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வினியோகம் செய்து வந்ததும், அண்மை காலமாக அதிகாரிகள் கெடுபிடி காரணமாக போதை பொருளை வினியோகிக்காமல் வீட்டில் பதுக்கி வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
வாடகை வீட்டில் மூட்டை மூட்டையாக போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் காரைக்காலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story