மதுரை, வாடிப்பட்டியில் பரவலாக மழை, சாலையில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு


மதுரை, வாடிப்பட்டியில் பரவலாக மழை, சாலையில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 30 May 2019 3:45 AM IST (Updated: 30 May 2019 3:02 AM IST)
t-max-icont-min-icon

மதுரை, கள்ளந்திரி, வாடிப்பட்டியில் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. மழையுடன் வீசிய பலத்த காற்றில் மரங்கள் சாய்ந்து விழுந்தன.

கள்ளந்திரி,

மதுரை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பகல் வேளையில் அதிக அளவு வெளியே வரவில்லை. இந்த நிலையில் நேற்றுடன் அக்னி நட்சத்திரம் என்னும் கத்தரி வெயில் நிறை வடைந்தது. இதற்கிடையே நேற்று காலை மதுரையில் வெயில் கொளுத்திய நிலையில் மாலை கருமேகங்கள் திரண்டு மழை வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து மதுரை நகரின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது.

இதேபோல் வாடிப்பட்டி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் நீடித்த மழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்தது. வாட்டி வதைத்த வெயிலுக்கு இடையே பெய்த இந்த மழையால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

மதுரையை அடுத்த கள்ளந்திரி, கடச்சனேந்தல், கருப்பாயூரணி உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. மழையுடன் பலத்த காற்று வீசியது. இதனால் பல்வேறு இடங்கள் மரங்களின் கிளைகள் ஒடிந்து விழுந்தன. சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. சில பகுதிகளில் மின்கம்பிகளும் அறுந்தன. இதனால் மின்சாரம் தடைப்பட்டது.

குறிப்பாக மதுரையில் இருந்து அழகர்கோவில் செல்லும் சாலையில் கள்ளந்திரி பகுதியில் 8 மரங்கள் சாய்ந்தன. கள்ளந்திரியில் ஒரு மரமும், அப்பன்திருப்பதியில் 2 மரங்கள், திருவிளாம்பட்டியில் 2 மரங்களும், சுந்தரராஜன்பட்டியில் 2 மரங்கள், செம்பனேந்தல் விலக்கில் 1 மரமும் என அடுத்தடுத்து பலத்த காற்றுக்கு சாய்ந்து சாலையில் விழுந்தன. இதனால் அழகர்கோவில் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் திணறின. போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

சுமார் 1 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் போக்குவரத்து சீரானது. 

Next Story