திருவள்ளூரில் போலீசை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முற்றுகை
திருவள்ளூரில் போலீசை கண்டித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நேற்று கடம்பத்தூர் ஒன்றியம் பானம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த திரளான பொதுமக்கள் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் டாக்டர் பூவை ஜெகன்மூர்த்தி தலைமையில் முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
நாங்கள் பானம்பாக்கம் கிராமத்தில் காலம் காலமாக வசித்து வருகிறோம். இந்நிலையில் கடந்த வாரம் எங்கள் பகுதியில் ஓசூரம்மன் கோவிலில் ஜாத்திரை திருவிழா நடந்தது. அதில் ஏற்பட்ட தகராறு காரணமாக மோதல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசில் இருதரப்பினரும் புகார் அளித்த நிலையில் கடம்பத்தூர் போலீசார் ஒருதலைபட்சமாக செயல்பட்டு எங்கள் தரப்பை சேர்ந்த 12 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் எங்கள் பகுதியில் உள்ள சிலரை போலீசார் தேடி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் எங்கள் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதால் நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். தற்போது எங்கள் பகுதியில் வீட்டில் யாருமே இல்லை. போலீசுக்கு பயந்து அனைவரும் ஊரை விட்டு சென்றுவிட்டனர். இதனால் கால்நடைகளுக்கு தீவனம் வைக்க முடியவில்லை. விரைவில் பள்ளிக்கூடம் திறக்கப்படவுள்ள நிலையில் மாணவர்களை சேர்க்க முடியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம்.
எனவே போலீசார் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதை கண்டித்தும், எங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் முற்றுகைபோராட்டம் நடத்துகிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
பின்னர் அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை அதிகாரிகளிடம் அளித்துவிட்டு பின்னர் கலைந்து சென்றனர்.
இதில் புரட்சி பாரதம் கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story